சென்னை, நவ.5-
கவரைப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக கவனக்குறைவாக ரெயிலை இயக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த மாதம் 11-–ந் தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. மெயின் வழியில் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் வழியில் சென்றதே இந்த விபத்துக்கு காரணம் ஆகும். இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து, தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தண்டவாளம், சிக்னல், கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் ஆய்வு செய்தார். இதேபோல, தண்டவாளத்தில் ‘நட்டு, போல்டு’ ஆகியவை காணாமல் போனதும் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரெயில்வேயில் உள்ள 13 பிரிவுகளை சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
குறிப்பாக, பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் பைலட், துணை பைலட், கவரைப்பேட்டை ரெயில் நிலைய மேலாளர், மோட்டார் மேன், கவரைப்பேட்டை சிக்னல் ஆப்ரேட்டர்கள், நிலைய கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது. மேலும், கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்வே போலீசார் நாசவேலைக்கான சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
‘நட்டு’ மற்றும் ‘போல்டு’ மாயமானதால் கவரைப்பேட்டையை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட பழைய இரும்பு வாங்கும் கடைகளில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இதுவரையில் மொத்தம் 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது. இந்த நிலையில், கவரைப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக மேலும் 4 பிரிவு களின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதாவது, கவனக்குறைவாக ரெயிலை இயக்கி மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் (பிரிவு 281), கவனக்குறைவாக இருந்து காயத்தை ஏற்படுத்துதல் (125 ‘ஏ’) மற்றும் அலட்சியமான பணி (125 ‘பி’), ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தை விளைவித்தல் (154) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கவரைப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக, ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில், விசாரணையை முடித்து நேற்று மத்திய ரெயில்வே வாரியத்திடம் அறிக்கையை சமர்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை விவரம் விரைவில் வெளியாகும்.