சிறுகதை

கவனச் சிதைவு – ராஜா செல்லமுத்து

கம்பெனி கம்பெனியாக விண்ணப்பங்களைப் போட்டு உட்கார்ந்தான் சரவணன்.

எப்போதும்போல இன்று நடக்கவிருக்கும் நேர்முகத் தேர்வுக்கும் ஒரு கம்பெனியில் அமர்ந்திருந்தான் சரவணன். அவனோடு அவன் நண்பனும் வந்து இருந்தான்.

‘சரவணா இந்தக் கம்பெனியில ஏதாவது உனக்கு வேலை கிடைக்குமா?’ என்று உடன் வந்த நண்பன் மாேகன் கேட்டான்.

‘பார்ப்போம்’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பிரயோகப்படுத்தான் சரவணன்.

அந்தக் கம்பெனியின் வரவேற்பறையில் சரவணனுக்கும் மோகனுக்கும் தெரிந்த நண்பர் அமர்ந்திருந்தார். இருவரையும் பார்த்து புஷ்பராஜ் புன்னகை சிந்தினார்.

‘என்ன நீங்க இங்க வந்திருக்கீங்க?’ என்று புஷ்பராஜ் கேட்க….

‘இன்னைக்கு இந்தக் கம்பெனில எனக்கு இன்டர்வியூ’ என்றான் சரவணன்.

மோகனைப் பார்த்து புன்முறுவலுடன் புஷ்பராஜ்

‘ஹலோ…. ஹலோ’ என்று இருவரும் ஒருவருக்கொருவர் ஒற்றை வார்த்தையில் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

என்ன சரவணன் நிறைய கம்பெனியில நீங்க விண்ணப்பம் போட்டதா சொன்னாங்க . ஒரு கம்பெனில கூடவா உங்களுக்கு வேலை கிடைக்கல? என்று புஷ்பராஜ் கேட்டபோது,

என்னவோ என்ன நேரமோ தெரியல? எல்லாமே தப்பா தான் நடக்குது என்று கொஞ்சம் கலங்கியபடி சொன்னான் சரவணன் .

இடியே விழுந்தாலும் கலங்காத சரவணா எல்லாமே சில காலம் தான். சைக்கிள் சக்கரம் மாதிரி தான் மனித வாழ்க்கை. மேலே பாேற சக்கரம் கீழே வரும் . கீழ வர்ற சக்கரம் மேலே போகும். இதுதான் மனித வாழ்க்கை .

நம்ம சக்கரம் இப்போ கீழே இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஒருநாள் மேல வருவாேம் என்று தைரிய வார்த்தைகளைத் தந்தான் புஷ்பராஜ் .

சரி நீங்க எதுக்கு வந்தீங்க ? என்று சரவணன் கேட்டான்.

நானும் வேலைக்கு தான் வந்தேன். இங்கே எந்த வகையில எப்படி வேலைக்கு எடுக்கிறார்கள் ? என்று தெரிஞ்சுக்கலாம்னு தான் வந்தேன் என்றான் புஷ்பராஜ்

சரவணன் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

அப்போது நேர்முகத் தேர்வு செய்யும் பெண்மணி உள்ளே நுழைந்தாள்.

அதுவரையில் பேசிக் கொண்டிருந்த மூவரும் வேகமாக எழுந்தார்கள்.

‘உங்களுக்கு என்ன வேணும்? உங்களுக்கு என்ன வேணும்?’ என்று அங்கிருந்தவர்கள் ரொம்பவே அதிகாரத் தொனியில் கேட்டாள் அந்தப் பெண்.

‘இன்னிக்கி இன்டர்வியூ.. வரச் சொன்னீங்க அதான் வந்தோம்’ என்று சரவணன் சொல்ல

‘சரி இருங்க. நான் உங்களக் கூப்பிடுறேன்’ என்று சொன்ன அந்தப் பெண் ஒய்யார நடையுடன் அதிகாரத்துடனும் நடந்து உள்ளே சென்றாள்.

சீலிங் ஃபேன் கீழே இருக்கும் மனிதர்களுக்கு காற்று வருகிறதோ இல்லையோ அது மட்டும் சுழன்று கொண்டிருந்தது.

புஷ்பராஜ் சரவணன் மோகன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே இருந்து வெளியே வந்த ஒரு அலுவலக உதவியாளர் சரவணனை உள்ளே அழைத்தான். அதற்குள் விடைபெற்றார் புஷ்பராஜ்.

மோகனிடம் சொல்லி விட்டு உள்ளே சென்றான் சரவணன்.

அவன் சென்றவுடன் இரண்டு மூன்று முறை தண்ணி குடித்திருந்தான் மோகன்.

அது விரிந்து பரந்த அலுவலகம். ஆதலால் ஆங்காங்கே ஆட்கள் நடந்து போவதும் வருவதுமாய் இருந்தார்கள். சிலர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் ஒருவருக்கொருவர் பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்கள்.

அங்கு என்ன பணி நடக்கிறது? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு வேலை நடந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் அப்பட்டமாகத் தெரிந்தது.

அலுவலகச் சுவரில் ஒட்டியிருந்த அந்த நிறுவனத்தைப் பற்றிய புகைப்படங்கள், படங்கள் என்று 10 முறைக்கு மேல் பார்த்துக் கொண்டே இருந்தான் மாேகன்.

நேரத்திற்கெல்லாம் தலையை மேலே தூக்கி தானாக சுத்திக் கொண்டிருக்கும் அந்த ஃபேனைப் பார்த்தான் என்று அந்த ‘ஃபேன் டடக் …டடக்…. டடக்… என்று அந்த காற்று இல்லாமல் சும்மாவே சுற்றிக் கொண்டிருந்தது.

மறுபடியும் சுவற்றில் ஒட்டி இருந்த படங்களை எடுத்து பார்த்தபடியே இருந்தான். உள்ளே போன சரவணன் அரை மணி நேரத்திற்கெல்லாம் வெளியே வந்தான்.

‘எப்படி இருந்தது இன்டர்வியூ?’ என்று மோகன் கேட்க தலையை மட்டுமே ஆட்டிவிட்டு ‘வெளிய போகலாம்’ என்றான் சரவணன்.

லிஃப்ட் இருந்தும் படி வழியே வெளியே நடந்து வந்தார்கள். இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கு வந்து தன் வாகனத்தை எடுத்து வெளியே வந்தார்கள்.

‘என்ன நடந்தது சொல்லுங்க’ என்று மோகன் கேட்க….

‘என்ன இன்டர்வியூ பண்ண பொண்ணு கொஞ்சம் அனாகரிகமா நடந்துக்கிட்டாங்க. அவங்க தன்னோட அங்கங்களை ஆபாசமாக காட்டிட்டு இருந்தாங்க. என்னோட பார்வை கண்ண தவிர்த்து வேறெங்கும் போகுதா. அப்படின்னு பாத்தாங்க. ஆனா நான் அவங்க கண்ண விட்டு வேற எங்கயும் பார்க்கல. ரெண்டு மூணு தடவை தப்பாவே அவங்க நடந்துக்கிட்டாங்க. நான் கண்ண மட்டும் பார்த்து பதில் சொன்னனே.. தவிர வேற எங்கயும் பாக்கல’.

‘ஓ அப்பிடியா? அப்படின்னா உங்களுக்கு இங்கே வேலை கன்ஃபார்ம்’ என்றான் மோகன்.

‘எப்படி?’ என்றான் சரவணன்.

‘இதுதான் சைக்காலஜி. நீங்க இந்த நிறுவனத்தில் எப்படி வேலை பாக்குறீங்க?’ பெண்கள் அதிகமாக வேலை செய்றாங்க. உங்களுடைய பார்வை. உங்கள் நடவடிக்கை எப்படி இருக்குன்னு சும்மா டெஸ்ட் பண்ணாங்க? அதுல நீங்க ஜெயிச்சுட்டீங்க. நிச்சயமா உங்களுக்கு வேலை கிடைக்கும்’ என்று மோகன் சொன்னான்.

எதுவும் புரியாமல் தலையைச் சொரிந்தான் சரவணன்.

Leave a Reply

Your email address will not be published.