வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் எல்லாம் நெடுஞ்சாலையில் உள்ள அந்த ஓட்டலில் நின்று தான் செல்லும்.
ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் இலவசமாக உணவு கொடுக்கிறார்கள் என்பதால் அந்த நெடுஞ்சாலை ஓட்டலில் பஸ் பயணிகளை இறக்கிவிட்டு இருபது நிமிடம் வண்டி நிற்கும் என்ற அறிவிப்பையும் சொல்லிவிட்டு இறங்குவார்கள் ஓட்டுனர்கள், நடத்துனர்கள்.
அந்த அத்துவான ரோட்டில் வேறு வழியின்றி பயணிகள் அந்த உணவகத்தில் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார்கள். அதைவிடக் கொடுமை பயணிகளை வேறு எங்கும் சிறுநீர் கழிக்க விடாமல் இரண்டு பக்கம் நின்று கொண்டு கையில் ஒரு கம்பு வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள் கழிப்பிடத்தை வாடகைக்கு எடுத்த கண்ணப்பனின் அடியாட்கள்
“ஏங்க ரோட்டுல பாத்ரூம் போறதுக்கு நீங்க ஏன் தடுக்குறீங்க? இது தப்பு. நான் எங்க போனாலும் போவேன்?அதக் கேட்க நீங்க யாரு? என்று ஒரு பயணி முறுக்க
” அதெல்லாம் முடியாது. பாத்ரூம் அங்க இருக்கு.அங்கதான் போயாகணும்.வேற எங்கயும் போகக்கூடாது என்று மிரட்டும் அடியாட்களை மீற முடியாமலும் வாகனங்கள் வேக வேகமாகப் போகும் நெடுஞ்சாலையைக் கடக்க முடியாமலும் வேறு வழியின்றியும் பயணிகள் அந்தச் சாலையோர ஓட்டலின் அருகே கட்டியுள்ள கழிவறைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப் படுவார்கள். கழிவறையின் முன்னே கம்பீரமாகக் கல்லாவில் அமர்ந்திருக்கும் கண்ணப்பன் பயணிகளிடம் பத்து ரூபாய் கறாராக வசூலிப்பான்.
” ஏங்க நான் ஒன் பாத்ரூம் தான் போகணும் .அதுக்கு பத்து ரூபாயா ? என்று யாராவது பயணி ஒருவர் கேட்டால்
“நீ ஒன் பாத்ரூம் போவியோ இல்ல ரெண்டு பாத்ரூம் போவியோ எனக்கு தெரியாது? பத்து ரூபாயக் வச்சிட்டு தான் போகணும் ” என்று ரொம்பவே திமிராகப் பேசுவான் கண்ணப்பன்.
” இதெல்லாம் ரொம்ப அநியாயங்க. கவர்மெண்ட்ல ஐம்பது காசு தான் வாங்கணும்னு டெண்டர் விட்டு இருக்காங்க. நீங்க பத்து ரூபா வசூல் பண்றது அநியாயம்
இல்லையா ? என்று யாராவது கேள்வி கேட்டால்
“என்ன பண்ணுவ .அப்படித்தான் வசூல் பண்ணுவேன். நீ எங்க போய் சொல்லனுமோ சொல்லு? என்று தெனாவட்டாகப் பதில் சொல்வான் கண்ணப்பன் .வேறு வழியின்றி பயணிகள் பத்து ரூபாய் கொடுத்து அவசரத்தை முடித்து வருவார்கள்.
“யூரின அதிக நேரம் அடக்கக் கூடாது; அப்படி பண்ணா சால்ட் சேர்ந்துடும். அதான் பயம்; பரவால்ல பத்து ரூபா போனா போகுது ” என்று எல்லாப் பயணிகளின் சாபங்களை வாங்கிக் கொண்ட கண்ணப்பன் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான்.
” எத்தனை பேர பாத்திருக்கோம். எல்லாம் பிஸ்கோத்து ” என்று தனக்குத்தானே சிரித்துக் கொள்வான்.
” அவசரத்துக்கு யூரின் முட்டிக்கிட்டு வருது; அதைக் கழிக்கிறதுக்கு பத்து ரூபாய் வசூல் பண்ற? நீ கண்டிப்பா என்னைக்காவது ஒரு நாள் அதன் பலன அனுபவிப்ப” என்று திட்டி விட்டுச் செல்லும் பயணிகளைப் பார்த்து சிரித்தபடியே சொல்லுவான் கண்ணப்பன்.
” அதெல்லாம் ரொம்ப பாத்தாச்சு. போ… போ உன் சாபம் எல்லாம் இங்க பலிக்காது. காலையிலிருந்து இங்கே உட்கார்ந்து பார் .அப்பதான் உனக்கு தெரியும் “என்று தெளிவாகப் பதில் சொல்லும் கண்ணப்பனிடம் பணி புரியும் பணியாளி
“அண்ணே பத்து ரூபா ரொம்ப அதிகம்ண்ணே. அஞ்சு ரூபாயா குறைச்சுக்கலாமா? ஐம்பது காசு தான் அரசாங்கத்துல வசூல் பண்ண சொல்லி இருக்காங்க. பத்து ரூபாய் வாங்குறது அநியாயமா இல்லையா?” என்று கேட்டான்.
” ஏன்டா நியாயம் அநியாயம் பேசிட்டு இருக்க? இந்த அத்துவான ரோட்டுல வேற எங்க போக முடியும்? இரண்டு பேர அடியாளா வச்சிருக்கிறேன் .அவனுகளுக்கு எவன் சம்பளம் கொடுக்கிறது? இப்படி எல்லாம் வசூல் பண்ணுனாத்தான் நாம வாழ முடியும்டா “என்று அத்தனை பேரையும் மிரட்டுவான் கண்ணப்பன்.
அன்று இரவு கண்ணப்பனுக்கு வயிறு புரட்டிப் புரட்டி வலித்தது.
” என்னன்னு தெரியல ஏதோ செரிமானம் ஆகாதத சாப்பிட்டேன் போல. வயிறு இந்த வலி வலிக்குது என்று லேசாகச் சொன்னவன் பின்பு அடி வயிறு பயங்கரமாக வலிக்க கண்ணப்பனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.
அடி வயிறு வலிக்குது வயிறு வலிக்குது. என்ன செய்றது? என்று கதறினான் கண்ணப்பன்.
” அண்ணே என்ன செய்துண்ணே” என்று அவன் உடன் இருந்த அடியாட்கள் கேட்க
” யூரின் வர்ற மாதிரி இருக்குதுடா ; ஆனா வரமாட்டேங்குது”
“சரி வாங்கண்ணே போகலாம் என்று கைத்தாங்கலாக கண்ணப்பனை அந்த மருத்துவமனைக்கு க் கூட்டிப் போனார்கள். அந்த மருத்துவமனையில் இருந்த கழிவறையில் சிறுநீர் கழித்துவரச் சொன்னார்கள்
“ஐயோ யூரின் வர்ற மாதிரி இருக்கு; ஆனா வரமாட்டேங்குதுடா?” என்று கதறினான்.
“அடி வயிறு வலிக்குதே? யூரின் வரமாட்டேங்குதே ” என்று கதறிய கண்ணப்பனை சிறிது நேரத்திற்கெல்லாம் மருத்துவர் பரிசோதனை செய்தார்.
“என்ன செய்யுது” என்று மருத்துவர் கேட்டபோது
“யூரின் வர்ற மாதிரி இருக்கு டாக்டர் .ஆனா வர மாட்டேங்குது ” என்று அழுது புலம்பினான் கண்ணப்பன்
அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்த அந்த மருத்துவர்
“உங்களுக்கு யூரின் பிளாடர்ல சால்ட் சேர்ந்து பிளாடர் ஃபுல்லா அடைச்சிருக்கு. ஸ்கேன் பண்ணிட்டு,ஆப்ரேஷன் பண்ணனும். பத்து லட்ச ரூபாய் பணத்தை
கட்டுங்க “என்று மருத்துவர் சொன்ன போது
விழி பிதுங்கினான் கண்ணப்பன்.
“பத்து லட்ச ரூபாயா ?வாய் பிளந்தான் கண்ணப்பன்.
பத்து லட்ச ரூபாய் கட்டுனா உங்களுக்கு ஆபரேஷன். இல்லையா அப்படியே வீட்டுக்கு போங்க” என்று ரொம்பவே கறாராகச் சொன்னார் மருத்துவர்
“எங்கிட்ட அவ்வளவு பணம் இல்ல டாக்டர்; கொஞ்சம் குறைச்சுக்கக் கூடாதா? என்று கண்ணப்பன் கேட்க
“அதெல்லாம் குறைக்க முடியாது. பணத்தை கட்றதுக்கு வழிய பாருங்க .இல்ல வேற ஹாஸ்பிடல் பாருங்க “என்று முறைப்பாகச் சொன்னார் மருத்துவர்
“டாக்டர் அவ்வளவு பணம் என்கிட்ட இல்ல டாக்டர். கொஞ்சம் கருணை
காட்டுங்க “என்று கண்ணப்பன் கதற
” என்ன வேலை பாக்குறீங்க ? என்று மருத்துவர் கேட்க
” ஹைவேஸ்ல இருக்கிற ஒரு கழிவறையை அரசாங்கத்தில டெண்டர் எடுத்து நடத்திக்கிட்டு இருக்கேன் டாக்டர் ” என்றான் கண்ணப்பன்.
“ஓ நீங்கதான் அந்த யூரின் போறதுக்கு எல்லாம் பத்து ரூபா வாங்குறவரா? ஒரு முறை எங்கிட்டயே நீ பத்து ரூபா வசூல் பண்ணியிருக்கீங்க.ஏன் இவ்வளவு காசு வசூல் பண்றீங்கன்னு, நான் உங்களத் திட்டி இருக்கேன்” என்றாார் அந்த மருத்துவர்.
அந்த மருத்துவர் சொன்னதைக் கேட்டு மயங்கிக் கீழே விழுந்தான் கண்ணப்பன்.
#சிறுகதை #அறைகள் சொல்லும் கதைகள்