சிறுகதை

கழிவறை எண்கள் – ராஜா செல்லமுத்து

புவனேசுவருக்கு இதுவெல்லாம் உண்மையா? என்று விளங்கவில்லை. இப்படியும் நடக்குமா? இது உண்மைதானா? இதற்கு போன் செய்தால் இவர்கள் எழுதி இருப்பதை தருவார்களா? என்று குழம்பி போய் அந்த பொதுக் கழிப்பறையில் நின்று கொண்டிருந்தான்.

அவன் கழிவறைக்கு தான் சென்றான். ஆனால் அங்கு கண்ட காட்சி அவனை நிலைகுலைய வைத்தது. இதற்குத் தான் இவர்கள் இங்கு கழிவறைக்கு வருகிறார்களா? இவர்கள் கழிவறைக்குள் அமர்ந்து இவ்வளவு ஓவியங்களையும் இவ்வளவு கதைகளையும் எழுதி வைப்பதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறதா? இதை எழுதி வைப்பதால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது. இப்படியும் மனிதர்கள் சந்தோசப்பட்டு கொள்வார்களா? என்றெல்லாம் வியந்து போய் அந்த கழிவறையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்து கொண்டு இருந்தான் புவனேசுவர் .

அவனுக்கு கழிவறை எண்ணமே தோன்றவில்லை. சுற்றி இருப்பதைப் படித்து ஒரு விதமான மகிழ்ச்சி அடைந்து நின்றான்.

சுவரில் நிறைய தொலைபேசி எண்கள் எழுதி இருந்தன. அந்தத் தொலைபேசி எண்களை எல்லாம் ஒரு முறைக்கு பலமுறை பார்த்துக் கொண்டான்.

இவ்வளவு தைரியமாக தொலைபேசி எண்களை வைத்திருக்கிறார்கள்? ஒருவேளை போன் செய்து கேட்டால் அந்த விசயத்திற்கு அவர்கள் வருவார்களா? என்று அவனுக்கு முட்டாள்தனமான ஒரு எண்ணம் தோன்றியது .

சரி போன் செய்து தான் பார்ப்போம் என்று அங்கு எழுதியிருந்த ஒரு எண்ணிற்கு ஃபோன் செய்தான்.

இரண்டு மூன்று ரிங் போனதும் ஒரு பயத்தில் போனை கட் செய்தான் புவனேசுவர்.

ஐயோ தப்பு செஞ்சிட்டோம். யாருக்கு நாம ஃபாேன் செஞ்சாேம் பயமா இருக்கு

என்று நினைத்துக் கொண்டு பாத்ரூமில் விட்டு வெளியே வர முயற்சி செய்தான்.

அவன் வருவதற்குள் அவன் போன் ரிங் ஆனது. எடுத்து பேசுவதற்கு எத்தனித்த போது ‘அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை மௌனமாக இருந்தான். எதிர் திசையிலும் மௌனம்.

யார் பேசுவது என்ற ஒரு குழப்பத்தில் இருப்பார்கள் போல. எதிர் திசையில் இருந்த நபரே மெளனத்தை உடைத்தாள்

யார் பேசுறது ?என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

அந்தப் பெண் குரலைக் கேட்டதும் துள்ளி எழுந்த புவனேசுவர் நான்தான் பேசுறேங்க என்றான்.

நான் தான் நான் யாரு? என்றாள் அந்தப் பெண்.

என்னோட நம்பர் எப்படி உங்களுக்கு கிடைத்தது? என்று கேட்க

உண்மையை சொல்லலாமா? பொய் சொல்லலாமா என்று தடுமாறினான்.

அவன் தடுமாற்றத்தைப் புரிந்து கொண்ட அந்தப் பெண்

என்னுடைய நம்பரை பப்ளிக் பாத்ரூம்ல இருந்தா எடுத்தீங்க என்று பளிச்செனக் கேட்டாள்.

அதற்கு பதில் சொல்ல முடியாமல் விழித்து நின்ற புவனேசுவரைச் சமாதானப்படுத்திய அந்தப் பெண் அதெல்லாம் எனக்கு தெரியும். நீங்க நான் சொல்ற இடத்துக்கு வரலாம் என்று அவனுக்கு தன்னுடைய லைவ் லொகேசன் அனுப்பினாள்.

அரக்கப் பரக்க அந்த இடத்திற்கு ஓடினான் புவனேசுவர். சிறிது நேரத்திற்கு எல்லாம் அவனை யாரோ அழைத்து போனார்கள்.

பலான இடத்திற்கு தான் வந்திருக்கிறோம் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தபோது அவன் கன்னத்தில் பளார் என்று அறை விழுந்தது.

இதைச் சற்றும் எதிர்பாராத புவனேசுவர்

இவர்கள் யார் என்று தெரியாமல் குழம்பினான். நீதான்அந்த பப்ளிக் பாத்ரூம்ல எழுதியிருக்கிற நம்பர பார்த்து போன் பண்ணவனா? என்று கேட்டபோது சன்னமாக தலையாட்டினான் புவனேசுவர்.

எங்கேயாவது ஒரு நம்பர் எழுதி இருந்தா வாய பொளந்துட்டு போன பண்றது? இருக்கிற காசு எல்லாம் எடுடா என்று அடிக்க அவன் கையில் கட்டி இருந்த கடிகாரம் மோதிரம் அத்தனையும் பிடுங்கிக் கொண்டு அவன் மணிப்பர்சில் இருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு விரட்டினார்கள்.

இனிமே எந்த பப்ளிக் பாத்ரூம்லயாவது எழுதி இருக்குற நம்பரை பார்த்து பேசின கடைசியில் உனக்கு இது தான் கதி ஓடுறா என்று அத்தனையும் பிடுங்கி விட்டு அனுப்பினார்கள்.

இதை எப்படி வெளியில் சொல்வது? என்று யாரிடம் சொல்லாமல் இருந்தான் புவனேசுவர்.

இப்போதெல்லாம் அவன் பப்ளிக் பாத்ரூம் சென்றால் தவறியும் சுவர்களைப் பார்ப்பதில்லை. நமக்கு எதுக்கு வம்பு? என்று இருந்து கொள்வான் .

ஒருநாள் பப்ளிக் பாத்ரூம் செல்ல வேண்டி இருந்தது .

உள்ளே யாரோ பேசும் சத்தம் கேட்டது .

நான்தான் பேசுறேன். இந்த நம்பர் பப்ளிக் பாத்ரூம் இருந்தது. வந்தா அது கிடைக்குமா? என்று கேட்டான்.

வருத்தப்படாதீங்க. லைவ் லொகேசன் அனுப்புறேன் வந்துருங்க என்று எதிர் திசையில் இருந்த பெண் பேசுவது புவனேசுவரின் காதில் கேட்டது

இன்னொருத்தனும் மாட்டுனானா? இவனுக எல்லாம் சொன்னா கேட்க மாட்டான்க பட்டா தான் திருந்துவானுக என்று நினைத்தபடியே அந்த இடத்தை விட்டு ஓடினான் புவனேசுவர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *