செய்திகள்

கள்ளழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்வில் உயிரிழந்திருந்தால் நிவாரணம் வழங்கப்படும்

Makkal Kural Official

மதுரை, மே 12–

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான நிவாரண வழங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:–

“அளவுக்கடங்காத, கட்டுக்கடங்காத கூட்டம். பால வேலைகள் நடப்பதால் சாலைகள் முறையாக சீரமைக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் உயிரிழந்தவர் குறித்து முறையாக தகவல் கேட்டு அறிந்து வருகிறோம். அப்படி ஏதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கான நிவாரணம் வழங்குவோம்” என்றார்.

நிவாரணம் வழங்கப்படும்

முன்னதாக திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 45) என்ற பொறியாளர் இன்று காலை கள்ளழகரை காண மண்டகப்படி பகுதிகளுக்குள் நின்று கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிநாதனை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் அங்கும் இங்குமாக அலைந்து திரியக்கூடிய நிலை ஏற்பட்டது. பின்னர் வேறு வழியின்றி கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான தண்ணீர் நிரப்பப்பட்ட பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *