செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 20–
கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்போரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரத்தையும் தருகிறது. மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல என்று மாவட்ட ஆட்சியர் மறுத்திருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் கள்ளச்சாராயம் குடித்துதான் உயிரிழந்திருக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறுகிறார்கள்.
ஒடுக்க வேண்டும்
கடந்த ஆண்டு மே மாதம் 20 ந்தேதியன்று விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்து ஓர் ஆண்டு ஆவதற்குள் மேலும் அதேபோன்று துயரமான சம்பவம் நடந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தொடர்ச்சியாக விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில்; கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அதை விற்பதனால் உயிர்பலி ஆவதும் தொடர்கதையாகவுள்ளது. கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்கள், அதனை விற்பவர்கள் மீது அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கொறடா நியமனம்
மேலும் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப் பேரவை துணைத் தலைவராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்னம் எம்.எல்.ஏ., கொறடாவாக வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எம்.ஹெச்.அசன்மவுலானா எம்.எல்.ஏ ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.