செய்திகள்

கள்ளச்சந்தையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனையான ரெம்டெசிவிர்’ மருந்து : மருத்துவர், ஊழியர் கைது

சென்னை, மே.5-

சென்னையில் கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்த கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனை டாக்டர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மருந்து ஊழியரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் நுரையீரல் 50 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக ‘ரெம்டெசிவிர்’ பயன்படுத்தப்படுகிறது. எனவே அந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1,568-க்கு விற்கப்படும் இந்த மருந்தை இரவு-பகலாக காத்திருந்து மக்கள் வாங்கி செல்லும் கடினமான சூழல் உள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சென்னையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்டோர் இதுவரையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் வேலை பார்க்கும் டாக்டர் ராமசுந்தரம் (வயது 25) ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக குடிமை பொருள் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமை பொருள் இன்ஸ்பெக்டர் தன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் மற்றும் போலீசார் சாதாரண உடையில், கிண்டி பஸ்நிலையம் அருகே டாக்டர் ராமசுந்தரத்தின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அவரது காரில் 12 ‘ரெம்டெசிவிர்‘ மருந்துகள் இருந்தன. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், 12 ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை டாக்டர் ராமசுந்தரத்திடம் வழங்கினார். அப்போது அவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர், கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனை மருந்தாளுனர் கார்த்திக் (27) என்பது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்திக், கிண்டி கிங்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த மருந்தை திருடி டாக்டர் ராமசுந்தரத்திடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்ததும், அதனை டாக்டர் ராமசுந்தரம் கள்ளச்சந்தையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *