சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு தள்ளுபடி
புதுடெல்லி, டிச.18-–
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அண்ணா தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் பாலு, தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன், பா.ஜ.க வக்கீல் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி அடங்கிய அடங்கிய அமர்வு, கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த 20-ந்தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே ஐகோர்ட் உத்தரவை எதிர்த்தும், இடைக்கால தடை விதிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் டி.குமணன் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பார்த்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘இந்த விவகாரம் தொடர்பான பொதுநல மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், மாநில போலீஸ் துறை விசாரித்து வந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது’ என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், ‘சென்னை ஐகோர்ட் உத்தரவால், தமிழ்நாடு அரசுக்கு என்ன பாதிப்பு?. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு வழக்குகளை சி.பி.ஐ.யே விசாரிக்கட்டும்’. இதனால் தமிழ்நாடு அரசுக்கு என்ன கவலை?’ என்று கேட்டனர். இதற்கு தமிழக அரசின் தலைமை வக்கீல் பி.எஸ்.ராமன், ‘இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு பாதகமாக உள்ளது’ என வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசே விசாரிக்க விரும்புகிறதா?’ என கேட்டனர். அதற்கு தமிழக அரசின் தலைமை வக்கீல் பி.எஸ்.ராமன், ‘இந்த விவகாரம் தொடர்பான புலன்விசாரணையை சி.பி.சி.ஐ.டி. நடத்தி முடித்துள்ளது. குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையில் எவ்வித குறையும் இல்லை’ என வாதிட்டார். வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் நன்கு ஆராய்ந்து பிறப்பித்த உத்தரவில் தலைமை யிடுவதற்கு முகாந்திரத்தை காண இயலவில்லை’ எனக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.