சென்னை, ஜூனக் 27–
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்துக்கு பின்னால் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வக்கீல், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பால்கனகராஜ் வாயிலாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆதாரமின்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். நோட்டீஸ் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் இதற்கு, அவர் மன்னிப்பு கோரவில்லை என்றால், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.