செய்திகள்

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த 27 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

கள்ளக்குறிச்சி, ஜூன் 21–

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெத்தனால் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதைதொடர்ந்து கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன், மதுவிலக்கு அரசு செயலர் கே.அமுதா, நெடுஞ்சாலைகள் துறை அரசு செயலாளர் பிரதீப் யாதவ், சிறப்பு திட்ட செயலாக்க அரசு செயலாளர் தரேஷ் அகமது, சுகாதார திட்ட இயக்குநர் ம.கோவிந்தராவ், மாவட்ட கலெக்டர் பிரசாந்த், நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், தா.உதயசூரியன் ஆகியோர் உடனிருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கடந்த 19–ந் தேதி அன்று மெத்தனால் அருந்திய நபர்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க, உயர்தர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது. மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் சில நபர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம், விழுப்புரம், பாண்டிச்சேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. இதில், எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி இறந்த நபர்களுக்கு உடற்கூராய்வு உடனடியாக மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம்மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு மருத்துவ உதவிகள், கூடுதல் மருத்துவர்கள், போதிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து, சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவ குழுக்களால் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

கருணாபுரத்தில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபர்களின் இல்லத்திற்கு அமைச்சர்கள் சென்று அவர்களது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும், உயிரிழந்த நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்கள். முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவித்தொகையினை உயிரிழந்தவர்களின் 27 குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி, வருவாய் அலுவலர் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) செந்தில்குமார், துணை இயக்குநர் ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *