அறிவியல் அறிவோம்
“வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால் அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது என்றே அர்த்தம்”.
அப்துல் கலாமின் இந்த பொன்மொழிகளுக்கு ஏற்ப இளம் விஞ்ஞானிகள் பவித்ராவும் இலக்கியாவும் பயம் அறியாமல் அறிவியல் கண்டுபிடிப்புகளின் நாயகிகளாகத் திகழ்கின்றனர்.
தமிழக இளம் விஞ்ஞானிகள் என்ற பெயரை ஈரோடு பவித்ரா, இலக்கியா எடுத்துள்ளனர்.
இவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தேசிய விருது பெற்றவர்கள்.ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தொடங்கிய இந்த இளம்விஞ்ஞானிகளின் கதை தற்போது குடியரசுத் தலைவர் விருதுவரை சென்றிருக்கிறது.
“விளைச்சல் பருவத்தில் களைச் செடிகளை அகற்றுவதற்கு அதிகளவு செலவு செய்ய வேண்டியுள்ளதை கண்டோம். தேவையற்ற செடிகளை பிடுங்கும் இயந்திரத்தை வடிவமைத்திருத்திருக்கிறோம்” என்கிறார் பவித்ரா.
“எனது கண்டுபிடிப்புகள் பிரச்சனைக்கு தீர்வாக அமையவேண்டும் என்பதில் முடிவாக இருக்கிறேன்” என்கிறார் இலக்கியா.
நேரம் பொருத்தப்பட்ட கொசு ஒழிப்பு இயந்திரம், தென்னைமரத்தில் எலித்தொல்லையை கட்டுப்படுத்தும் கருவி ஆகியவை இலக்கியாவின் கண்டுபிடிப்புகளாகும். இலக்கியா கண்டுபிடித்த பாதாள சாக்கடையை சுத்தப்படுத்தும் கருவிக்கு 2014ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய விருது கிடைத்துள்ளது. இப்படி உரமிடும் கருவி, களை எடுக்கும் கருவி, மரவள்ளிக் கிழங்கு பிடுங்கும் கருவி என விவசாயத்திற்கு உதவியாக 10 விதமான கண்டுபிடிப்புகளை வடிவமைத்துள்ளார்
தன் கண்டுபிடிப்புகளுக்காக மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ள 14 வயது பவித்ரா, ஆண்டுதோறும் நடைபெறும் ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் 2012 முதல் பங்கேற்று மாவட்ட, மாநில மற்றும் தென்இந்தியா அளவிலான விருதுகளையும் பெற்று வந்திருக்கிறார்.
பிரச்சனைகளின் தீர்வே கண்டுபிடிப்புகள்
பவித்ராவின் கண்டுபிடிப்புகளுக்கு சவால் விடும்வகையில், தினசரி மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்னைகளுக்கான தீர்வை இலக்கியா முன்னெடுத்து வருகிறார். “என் தங்கை இலக்கியா என்னைவிட படு சுட்டி, நான் 6 ம் வகுப்பு படிக்கும் போது அவள் 3 ம் வகுப்பு தான் படித்தாள். ஆனால் அப்போதே எனக்கு போட்டியாக கண்டுபிடிப்பு களத்தில் குதித்து விட்டாள் என்று புன்னகைக்கிறார் பவித்ரா. இலக்கியா தன்னுடைய கண்டுபிடிப்புகளை என்னிடம் கூட பகிர்ந்து கொள்ள மாட்டாள்”
என்று அறிவியல் களத்தில் தங்களுக்கு இருக்கும் ஆரோக்கியமான போட்டியை பகிர்ந்து கொள்கிறார் பவித்ரா.
பவித்ராவும் இலக்கியாவும் தனித்தனியே தங்களது கண்டுபிடிப்புகளை செய்து வருகின்றனர். எனினும் அண்மையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளனர். “எங்கள் வீட்டைச்சுற்றி கைத்தறி துணி தயாரிக்கும் பல்வேறு எந்திரங்கள் உள்ளன. நோய்வாய்ப்பட்ட ஒருவர் கால்கள் செயல்படாததால் தறித் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் அவரது அன்றாட பிழைப்பு திண்டாட்ட மாகிவிட்டது. இதைக் கண்ட எனக்கு ஏன் இதற்கு தீர்வு காணும் ஒரு கருவியை உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது” என்கிறார் பவித்ரா.
புதிய கருவி பற்றிய எண்ணத்தை அம்மா, தங்கையிடம் தெரிவித்தேன். அவர்கள் இதற்கு உதவத் தயாராக இருந்தனர். முதலில் இது தொடர்பாக ஒரு வரைபடத்தை உருவாக்கினேன், பின்னர் என் தங்கை இலக்கியாவின் ஆலோசனைப்படி மாற்றங்கள் செய்து பின்னர் அதற்கு உருவம் கொடுத்தோம். ஊனமுற்றவர்கள் கால்களைப் பயன்படுத்தாமல் சென்சார் உதவியுடன் பெடலை உபயோகிக்கும் தறி எந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் இந்த புதிய முயற்சிக்கு தேசிய விருதை வென்று வந்துள்ளனர் இந்த இளம்கன்றுகள்.