அது ஒரு சிறு வயது மரணம். வாழ வேண்டிய வயதில் அந்தப் பெண் இறந்து விட்டாள். அவளின் இரண்டு குழந்தைகள், கணவன் உற்றார், உறவினர்கள் எல்லாம் அந்த மரணத்தை மிகவும் துயரமாக நினைத்தார்கள். ஆறுமுகம் மட்டும் அந்த மரணத்திற்கு வரச் சம்மதிக்கவில்லை. அவன் இறந்து போன பெண்ணின் உறவினர் தான். இருந்தாலும் எனக்கு இந்த மரணத்தில் உடன்பாடு இல்லை என்று சொன்னார்.
” இல்ல நீங்க வந்து தான் ஆகணும்”
என்று பூமி சொல்ல
” நான் அங்க வந்தாலும் அழப்போறதில்லை. எனக்கு அழுகை வராது. இறந்து போன பொண்ணு எனக்கு ரொம்ப சொந்தம்; எல்லாரும் அழுதுட்டு இருப்பாங்க. ஆனா நான் மட்டும் அழாம இருந்தா நல்லா இருக்காது . என் மனசு ரொம்ப கல் நெஞ்சு; எதுக்கும் இறங்காது “
என்று விடாப்பிடியாகச் சொல்லிக் கொண்டு இருந்தார் ஆறுமுகம்.
” நீ வந்து தான் பாரு. அழுவதும் அழாததும் உன் விருப்பம். அழுகாதவர்களை கூப்பிட்டு அபராதம் விதிக்க போறாங்களா என்ன ? நீ அந்த மரணத்தில கலந்து கொள்றது தான் நல்லதுன்னு நினைக்கிறேன்”
என்று பூமி சொன்னார்.
” இல்ல பூமி. ரொம்ப நெருங்கிய சொந்தம். எனக்கு எந்த மரணத்திலும் எனக்கு அழ வராது. எங்க அப்பா இறந்ததுக்கு கூட நான் அழுததில்லை. அவ்வளவு கல் நெஞ்சு. இது சின்ன வயசு பொண்ணு. அங்க வந்து நான் அழாம வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்னா. எனக்கு ஒரு மாதிரியா இருக்கும் நான் வரல “
என்று பிடிவாதம் பிடித்தார் ஆறுமுகம்.
” சரி உன் இஷ்டம் ” என்று உதறிய பூமி அந்த மரணத்திற்குப் புறப்படத் தயாராக இருக்கும்போது
“பூமி. சரி இவ்வளவு சொல்ற. நான் வரேன் “
என்று இருவரும் அந்த மரணத்திற்கு கிளம்பினார்கள். அந்த இளம் வயது மரணம். அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது. மரண ஓலம் அந்தப் பகுதியைச் சோகமாக வைத்திருந்தது. அழாத ஆட்கள் பாவம் செய்தவர்கள் . இப்படி சின்னஞ்சிறுசுகளை விட்டுட்டு போயிட்டாளே? இந்த பிள்ளைகளை யாரு பாத்துக்கிறது. வாழ வேண்டிய வயசு. இப்படி நடந்திருக்கக்கூடாது”
என்று எல்லோரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். .
பாடை தயாரானது. நீர் மாலைக்கு ஏற்பாடானது. புதைப்பதற்கு குழி வெட்டி ஆயிற்று .எல்லாம் முடிந்தாயிற்று. இன்னும் சற்று நேரத்தில் பிணம் சுடுகாட்டுக்கு கொண்டு போக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
” இந்த குழந்தைங்க. இன்னும் கொஞ்ச நாளைக்கு ஸ்கூலுக்குப் போக முடியாது .எப்படி இந்த குழந்தைங்க படிக்க போகுதோ?
என்று ஒரு பெண் அந்த மரண வீட்டில் சொல்ல
“ஐ .அப்ப எங்களுக்கு ஸ்கூல் லீவா? நான் ஸ்கூலுக்கு போக வேண்டாமா?
என்று இறந்து போனவளின் மூத்த மகள் சொல்ல அதுவரை பாறாங்கல்லாயிருந்த ஆறுமுகத்தின் மனது வெடித்துச் சிதறியது.
ஓ…. என்று வாய் விட்டு அழுதார்.
” பெத்தவ எறந்து போனது கூட தெரியாம பள்ளிக்கூடத்திற்கு போகனுமின்னு சொல்லுதே இந்த குழந்தை. இப்படி விவரம் தெரியாத குழந்தையை விட்டுட்டுப் போயிட்டாளே? இந்தக் காலன் இந்தப் பெண்ண இப்படியா கொண்டு போகணும். ஐயோ கடவுளே “
என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
அந்தப் பெண்ணின் குழந்தைகளை அரவணைத்தார் ஆறுமுகம். அவரைப் பார்த்துக் குழந்தைகளும் அழுதார்கள். ‘‘ அழாதீங்க உங்களை நான் படிக்க வைக்கிறேன் ’’என்று அழுதுகொண்டே சொன்னார்.
எதற்கும் எப்போதும் அழாத ஆறுமுகம் இப்படி கதறி அழுதது அந்த மரணத்திற்கு வந்தவர்களுக்கு வியப்பைத் தந்தது.
“இந்த மரணம் கல் மனசான ஆறுமுகத்தையும் கரச்சுப்புடுச்சே “என்று இறப்புக்கு வந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்த மரண வீட்டின் சோகத்தை கரைத்து நிறைத்தது ஆறுமுகத்தின் ஓங்கார அழுகை; குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய அவரது இளகிய நெஞ்சம்.