நாடும் நடப்பும்

கல்வி வளாகங்களில் கட்டாய தடுப்பூசி அவசியமாகும்


ஆர். முத்துக்குமார்


நாடெங்கும் கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டு வருகிறது. எல்லா துறைகளிலும் சகஜ நிலை திரும்ப ஆரம்பித்து விட்டது. ஆனால் கொரோனா பெரும் தொற்று சவால் தொடர்வது அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது.

மூன்றாம் அலை பீதி இடையே சகஜ நிலை திரும்ப ஆரம்பிக்கும் அறிகுறிகள் தோன்ற காரணம் என்ன? கடந்த 15 மாதங்களாக வீட்டில் முடங்கி இருந்த நிலை மாறுவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத வயதுடைய மாணவர்கள் வெளியேற ஆரம்பித்துள்ளதால் ஒரு வேலை மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது.

கல்விக் கூடங்களில் என்னதான் விழிப்புணர்வு இருந்தாலும் சமூக விலகள் கடைப்பிடிப்பதில் சிக்கல் உண்டு. வகுப்பு நேரத்திலும் வெளியேறும் போதும் மாணவர்களிடையே நெருக்கம் இருக்கத்தான் செய்யும்.

தடுப்பூசி பெற்ற பெருவாரியான ஆசிரியர்கள் தப்பித்து விடலாம். ஆனால் கல்விக் கூடங்களில் இருக்கும் துப்புரவு தொழிலாளிகள் இதர பணியாளர்கள் தடுப்பூசி பெற்றிருப்பார்களா? உறுப்புடன் சமூக விலகலையும் முகக்கவசமும் அணிந்திருப்பார்களா?

மாணவர்கள் சுதந்திரமாக இருக்கும்போது, பிறர் அக்கறையுடன் செயல்படுவது சாத்தியமா? இதனால் தொழிலாளர்களும் மாணவர்களும் பாதிப்படையக் கூடும்.

பள்ளிகள் திறப்பது பாதுகாப்பானதா? இல்லையா ?என்று அதிர்ச்சி அடையாமல் ஆசிரியர்கள், பெற்றோர், ஊழியர்கள், வேன், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

ஆக மூன்றாம் அலை சிறுவர்களை பாதிக்குமா? என்ற கேள்விக்குப் பதில் சிறுவர்கள், இளைஞர்களின் நடமாட்டத்தால் அதற்கான வித்திடல் அமையக் கூடும்.

மாணவர்கள் பாதிப்படைந்தால் ஆரம்ப அறிகுறிகளை தாங்கிக் கொள்ள முடியும். அது அவர்கள் செல்லும் பல்வேறு பொது இடங்களில் தொற்று பரவலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

ஆகவே தமிழக அரசு அன்றாடம் கல்விக்கூட தகவல்களை தீவிரமாக கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்குவதும் அவசியமாகும்.

இளம் தலைமுறையால் சமூதாயத்திற்கு ஆபத்து ஒருபுறம் இருக்க அந்த பச்சிளம் பாலகர்கள் பாதிப்படைந்து இறந்து விட்டால் அதன் பாதிப்பு சமுதாயத்தில் பெரிய அளவில் எதிரொலிக்கும். ஆகவே தீவிர கண்காணிப்பு மிக அவசியமாகும்.

கல்விக் கூடங்களை மூடி வைத்திருப்பதை விட மெல்ல செயல்பட வைப்பதும் நல்லது தான்.

இன்று கிட்டத்தட்ட 50 கோடி பேர் முதல் கட்ட தடுப்பூசியையும் 20 கோடி பேர் 2ஆம் கட்ட தடுப்பூசியையும் போட்டுக் கொண்டு விட்டோம். இந்நிலையில் மனதிற்கு மகிழ்வு தரும் செய்தியாக ஒரே நாளில் 1.33 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.

கொரோனா தொற்றின் 2வது அலை கடந்த மாத தொடக்கத்தில் குறைந்தது. தினசரி கொரோனா தொற்று 25 ஆயிரத்துக்கும் கீழ் இருந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே நாட்டில் சில மாநிங்களில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவது 3 ஆம் அலைக்கான தொடக்கமாக தெரிகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது மிக உறுதியான பாதுகாப்பை தருவது சமூகவிலகளும் முகக்கவசம் அணிவதும் தான். கூடவே கைகளை சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும்.

முதல் 2 அலைகளும் நமக்கு கற்றுத் தந்திருக்கும் அனுபவ பாடம் அதுவேயாகும். மேலும் உயர் பாதுகாப்பைத் தரும் வல்லமை தடுப்பூசிகளுக்கு இருப்பதை உணர்ந்து கல்விக்கூட எல்லைக்குள் வருபவர்கள் அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி அவசியமாகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *