சென்னை, ஜன.26-
கல்வி, மாநில உரிமையை காக்க டெல்லியில் எம்.பி.க்களுடன் சேர்ந்து தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும், தமிழகத்தில் 7-வது முறையாக ஆட்சி அமைத்து ஏற்றம் காண்போம் என்றும் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தி.மு.க. மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதன்படி சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியை திணிக்கலாமா? சமஸ்கிருதத்தை திணிக்கலாமா? என்றுதான் மத்திய ஆட்சியாளர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அன்னை தமிழை அழிக்க அன்னிய இந்தி நுழைக்கப்படுகிறது. இந்தியையும், சமஸ்கிரு தத்தையும் நம் மீது திணிப்பதற்காகதான் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள்.
தொல் சமூகமான தமிழ் சமூகம் மீது ஆரிய மொழியை நேரடியாக திணிக்க முடியவில்லை. எனவே பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூலமாக திணிக்க முயல்கிறார்கள். மாநில அரசு நிதியால் தமிழக மக்கள் உழைப்பால் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்களை கவர்னர் நியமிப்பாராம்.
மத்திய பட்ஜெட்டில்
தமிழ்நாடு பெயர் இல்லை
தமிழகத்திற்கு வர வேண்டிய இயற்கை பேரிடர் நிவாரண நிதி, பள்ளிக்கல்வித்துறைக்கு தர வேண்டிய நிதி ஆகியவற்றை தர மறுக்கிறார்கள். புதிய சிறப்பு திட்டங்களை அறிவிக்க மறுக்கிறார்கள். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. இன்று நாம் அடைந்துள்ள வளர்ச்சியை சாதாரணமாக அடையவில்லை. சமூக நீதிக்காக 100 ஆண்டுகள் போராடி உள்ளோம்.
திராவிட மாடல் அரசு தமிழகத்தை அனைத்து வகையிலும் உயர்த்தி வருகிறது. வான்நோக்கி தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியை, பல்வேறு ஆதிக்க சக்திகள் விரும்ப வில்லை. இந்த வளர்ச்சியை தடுக்க மாநில சுயாட்சியை சிதைக்கிறார்கள். கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கிறார்கள். தமிழகத்தின் மீது அரசியல், பொருளாதார, பண்பாட்டு படையெடுப்பை மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வருகிறது. அதற்கு எதிராக தி.மு.க. எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சாமல் போராடி வருகிறது.
மொழி, இனத்தை காக்க வேண்டும்
மொழிப்போர் இன்னும் முடியவில்லை. இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. அன்று மாணவர்களும், இளைஞர்களுக்கும் இணைந்து தமிழை காத்தார்கள். இன்று, பல்கலைக்கழகங்களை மாநில அரசிடம் இருந்து பறிக்கும் ஆபத்தை முறியடிக்க, தி.மு.க. மாணவர் அணி சார்பில் டெல்லியில் எம்.பி.க்களுடன் சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும். கல்வி உரிமையையும், மாநில உரிமையையும் காப்போம்.
2026 சட்டசபை தேர்தல் கொள்கை வாதிகளாக இருக்கக்கூடிய நமக்கும், கொத்தடிமைகளாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.வுக்கும் நடக்கக்கூடிய தேர்தல். இதை யாரும் மறந்து விடக்கூடாது. கருணாநிதி நம்மை விட்டு பிரிந்து சென்றபிறகு, சந்தித்த தேர்தல்களில் எல்லாம் வெற்றி பெற்று, அவருக்கு பெயர் சேர்த்து வருகிறோம். இது தொடரும்.
நான் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் முகங்களை கண்டு சொல்கிறேன். 2026 சட்டசபை தேர்தலிலும் நாம்தான் வெல்வோம். 7-வது முறையும் ஆட்சி அமைத்து ஏற்றம் காண்போம் என்று இந்த நேரத்தில் உறுதி ஏற்போம். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
இதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.யும் உரையாற்றினார். காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார்.