செய்திகள்

கல்வி நிறுவனங்களுக்கு அருகே டாஸ்மாக் கடைகள்: வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவு

சென்னை, அக்.21-

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகயவற்றின் அருகே உள்ள மதுபானக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அனைத்து முதுநிலைமண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் சிறப்பு பறக்கும்படை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார. இக்கூட்டத்தில் மேலாண்மை இயக்குநர் முனைவர் இல.சுப்பிரமணியன் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி, செந்தில் பாலாஜி பேசியதாவது:-

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அனுமதிக்கப்பட்ட பணிநேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டும். மதுபானங்கள் அனைத்தும் மதுபானக் கடைகளில் மட்டுமே விற்கப்பட வேண்டும். சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் அல்லது மற்ற பெட்டிக் கடைகளில் விற்கப்படுகிறதா எனக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கூடுதல் விலைக்கு விற்றால்…

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது எனவும் அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்பொழுது மதுக்கூடங்கள் செயல்பட அரசால் அனுமதி வழங்கப்படவில்லை. அரசினால் அனுமதி வழங்கப்படும் வரை மதுக்கூடங்கள் கண்டிப்பாக செயல்படக் கூடாது. ஏதேனும் மதுக் கூடங்கள் செயல்படுவது தெரியவரின் சம்மந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது உரியவிதிகளின் கீழ்வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வாட்ஸ் அப் குழு

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாஸ்மாக் ஆகியோருடன் 38 மாவட்ட மேலாளர்கள் மற்றும் அந்தந்த மாவட்டத்தின் பத்திரிக்கை செய்தியாளர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு அமைத்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து, எடுக்கப்பட்ட நடவடிக்கையினை இக்குழுவில் பதிவுசெய்திடவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்மூலம் ஒருவெளிப்படையான நிர்வாகத்தினை செயல்படுத்த இயலும்.

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகளின் சுற்றுப்புறம் சுகாதாரமான நிலையிலும் கொரோனா நோய்தொற்று பரவாமல் இருப்பதற்காக வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

அரசுக்கு நற்பெயர்

மதுபான சில்லறை விற்பனைக்கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் நுகர்வோரின் பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்கப்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிப்பாட்டுத்தலங்களுக்கு அருகில் அமையப் பெற்றிருந்தால் அதனைக் கண்டறிந்து உடனடியாக மாற்று இடம்தேர்வு செய்து மாற்றம் செய்திட அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசுக்கு நற்பெயர் விளைவிக்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் செயல்பட வேண்டும்.

வெளிமாநில மதுபான வகைகள் ஏதேனும் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *