ஆர். முத்துக்குமார்
உலக நாடுகள் பொருளாதார மீட்சிக்கு முக்கியத்துவம் தந்து வருவதை அறிவோம். நம் நாட்டிலும் அதீத அக்கறையுடன் பொருளாதார வளர்ச்சிகளுக்கு பல திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றோம்.
பொருளாதாரத்தை வலு சேர்க்க வைப்பதில் எண்ணெய், ஸ்டீல், தங்கம், உணவு தானியங்கள் போன்ற பல உண்டு. மேலும் வேலையின்மையை அகற்றுவதும் பண வீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசியையும் கட்டுக்குள் வைத்திருப்பதும் மிக அவசியமாகும். இவை தவிர பல நாடுகள் தங்களின் சிறு சிறு அம்சங்களை பளிச்சென்று வைத்து சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பார்கள்.
பைசா நகர சாய்வு கோபுரம், ஆப்பிரிக்கா காட்டு வளம் போன்றவற்றைக் காண சர்வதேச பயணிகள் தினமும் குறைந்தது 25,000 பேர் வருகிறார்கள்!
அதுவும் பொருளாதார அஸ்திவாரத்திற்கு வலு சேர்க்கும் துறையாகும். அது தவிர கல்வித் துறையும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நல்ல அடித்தளம் அமைக்கும் துறையாகும்.
ஆக்ஸ்போர்டில் படிக்கிறேன், ஸ்டான்போர்டில் படிக்கிறேன் என்றால் அது மதிப்பிற்கு உரியதாகவே இருப்பது தான் உண்மை.
தற்போது ஆக்ஸ்போர்ட் மற்றும் பல ஆஸ்திரேலியா பல்கலைக் கழகங்கள் பிற நாடுகளில் அவர்களது கல்விக் கூடங்களை அமைத்து நல்ல வருவாய் ஈட்டுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
சுற்றுலா, கல்வி ஆகிய இரு துறைகளிலும் நம் நாடு பின் தங்கி விடவில்லை. ஆனால் நம் நாட்டில் உள்ள பல புராதனமான கட்டுமானங்கள் உலகச் சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்தமானவையாக இருந்தும் பிற நாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கிடையாது, அது ஏன்? என்று ஆராய்ந்து தவறுகளை நிவர்த்தி செய்து மேம்படுத்தினால் நமது பொருளாதாரத்துக்கு புதிய ஆதரவு பெற்று வலுப்பெறும்.
அதைப் போன்று கல்வித் துறையும் உடனடி பொருளாதார வளர்ச்சிக்கு முதல் உதவி கிடையாது, ஆனால் சில ஆண்டுகளில் மாநிலத்தின் முகத்தை ஒளிப்படைத்ததாக மாற்றி விடலாம்!
அடிப்படை கட்டுமானங்கள் இல்லாத அரசு பள்ளிகள் ஏராளம். இப்போதுதான் கட்டிடங்கள், கழிப்பறைகள், மேஜை, நாற்காலிகள் இல்லாத பள்ளியே இல்லை என்று பெருமையுடன் கூறுகிற நிலையை ஏறக்குறைய தொட்டு இருக்கிறோம். இதில் புதிய தொழில்நுட்பம் எங்கிருந்து வரும்?
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கே செலவு செய்து கொண்டிருக்கப் போகிறோம்?
உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாட்டில், பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்து தருவதையே சாதனையாக பேசிக் கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டங்களுக்கு நகர்வதை எப்போது?
ஆண்டுதோறும் பல லட்சம் பட்டதாரிகள் வெளியே வருகிறார்கள். இவர்களை விடவும் அதிக எண்ணிக்கையில் 10,12ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் பல லட்சம்பேர் .
உள்நாட்டு உற்பத்தி பெருக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு, அயல் நாட்டு முதலீடுகள் வந்து குவித்தல், மாபெரும் நிறுவனங்கள் நமது நாட்டை நோக்கி வருதல்… எல்லாம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடையாளமாக இருக்கலாம்.
ஆனால் நமது சமுதாயம் ஆற்றல் மிக்க சமுதாயமாகவும் அறிவுசார் சமுதாயமாகவும் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் சமுதாயமாகவும் பேசப்படுவது தானே நமக்கெல்லாம் பெருமை.
அந்த நிலையை அடைய உடனடியாக மத்திய – மாநில அரசுகள் தங்களது கல்விக் கொள்கைகளை புதிய உத்வேகத்துடன் செயல்படுத்த உறுதியாக இருக்க வேண்டும்.