நாடும் நடப்பும்

கல்வியே பெண்களின் பாதுகாப்பு கவசம்


நாடும் நடப்பும்


ஆப்கானிஸ்தானில் பெண்களை கல்லூரிகளில் அனுமதிக்கக் கூடாது என்று ஆட்சியை பிடித்துள்ள தலிபான் தலைவர்கள் கட்டளை சுற்றறிக்கையை வெளியிட்டு இருப்பதற்கு அந்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் கடும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசை சிறு வயதில் 2014 ல் பெற்ற மலாலா யூசுப் சாய் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஆப்கானில் மகளிர்களுக்கு கல்வி மறுக்கப்படும் சூழ்நிலை வரும் அபாயம் இருப்பதை சுட்டிக் காட்டி வந்தார். தாலிபன் தலைவர்கள் ‘ஹிஜாப்’ கட்டாயம் என்று அறிவித்த நாளில் இதை மலாலா சுட்டிக் காட்டினார்.

சமீபமாக ஐநா தலைமை அதிகாரிகள் இது மிகப்பெரிய அநீதி என்று தலிபான் அரசை கண்டித்துள்ளது.

அருகாமை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நாம் ஆப்கானிய மாணவிகளுக்கு தந்து வந்த ஆதரவு அபாரமானது. ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா திடீரென அறிவித்தபோது பல வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருந்த மாணவிகள் சொந்த மண்ணுக்கு திரும்பினால் என்ன கவலைகள் காத்திருக்கிறது? என்ற அச்சக் கேள்விகளுக்கிடையே ஊருக்கு திரும்பினர். சொந்தபந்தங்கள் உற்சாகமாக இருக்க வரும் ஆபத்துகள் கண்முன் நிழலாட பல கனவுகளை தங்களுக்குள் பூட்டி வைத்தபடி ஊர் திரும்பினர் அல்லவா? அவர்களின் நிலை இன்று பரிதாபமாக அல்லவா மாறி விட்டது.

இது அவர்கள் நாட்டு உள்நாட்டு விவகாரம் என்று சர்வதேச அமைப்புகள் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதை பார்க்கும்போது கவலை தருகிறது.

இதில் இந்தியா என்ன செய்ய முடியும்? நாம் நம் தலைநகர் டெல்லியில் 2012ல் ‘நிர்பயா’ கூட்டு பாலியல் கொடுமையில் மருத்துவ கல்லூரி மாணவியை இழந்தோம். சில மாதங்களில் அவள் பெயர் வெளியிடாமல் ‘நிர்பயா’ என்று அழைக்கப்பட்டே வழக்கு நடைபெற்றது, அந்தத் தீமையை அவிழ்த்து விட்டவர்களுக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.

அது மட்டுமா? நிர்பயா பெயரில் ரூ.1000 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு மகளிர் மீதான குற்றங்களை தடுக்க திட்டம் அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடியும் 2014 ல் பதவி ஏற்ற நாளில் பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு நாடே தலைகுனிந்து வருத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும் குற்றங்களை தடுக்க உறுதி ஏற்றார். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவே இல்லை; மாறாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது தான் உண்மை. 2020ல் கொரோன ஊரடங்கு காலக்கட்டத்தில் மட்டுமே பெண்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.

ஆனால் நிர்பயா நிதி உருவாகி 10 ஆண்டுகள் கடந்த பிறகும் அதில் 30% கூட பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. ஆக பெண்கள் மீதான குற்றத்தைத் தடுக்க நாம் பின்தங்கி இருப்பது தான் உண்மை.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழும் டெல்லி, 2018–19 நிதியாண்டில் இத்திட்டத்திலிருந்து ஒரு பைசாவைக்கூட செலவிடவில்லை. தமிழக அரசு, கடந்த ஆண்டு வரை 10.7% நிதியைத் தான் பயன்படுத்தியுள்ளது.

நிர்பயா நிதியை மாநிலங்களுக்கு வழங்குவதில் உள்ள தேக்கநிலை குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு 2016ல் கேள்வி எழுப்பியது. நிர்பயா நிதி, மிகக்குறைவாக அல்லது செலவிடப்படாமலேயே இருப்பது குறித்து உள்துறை அமைச்சகமும் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை. பாலியல் துன்புறுத்தல், அமில வீச்சு உள்ளிட்டவற்றால் பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு வழங்கப்படும் இழப்பீடும் நிர்பயா நிதியின் கீழ் வரும். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் ஆண்டுதோறும் வெளியிடும் புள்ளி விவரங்கள் இப்படியான குற்றங்கள் அதிகரித்து வருவதையே காட்டுகின்றன. அதைக் கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்கியிருந்தால் கூட நிர்பயா நிதியின் அளவை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதில் கூட மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை. இதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நிர்பயா நிதி குறித்து தெரிவிக்க வேண்டும் என்று 2018ல் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

நிர்பயா நிதியை போன்றே ஐநா சபையும் ஓரு பெரும் தொகையை பெண்கள் கல்விக்கு குரல் கொடுத்து வரும் பலவற்றை கொண்டு ஓரு செயல் திட்டத்தை உருவாக்கி ஆப்கான், காங்கோ முதலிய நாடுகளில் பெண்கள் படிப்புக்கு உரிய கட்டுமானமும் வசதிகளும் பாதுகாப்பு அரண்களும் அமைக்க திட்ட வரைவு பற்றி யோசித்தாக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *