செய்திகள்

கல்வித் துறையில் சாதனை படைப்போம்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை, அக். 21–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் கல்வித்துறையில் பல்வேறு சாதனைகள் படைப்போம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

அப்துல் கலாமின் 90வது பிறந்த நாளையொட்டி நேசம் அறக்கட்டளை சார்பில் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் “வரலாறு படைக்கலாம் வா” என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு வரதராஜன் தலைமை தாங்கினார்.

நேசம் அறக்கட்டளை நிறுவனர் பி.டி.பாண்டி செல்வம் வரவேற்புரையாற்றினார். இந்த கருத்தரங்கில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்புரையாற்றினார். இந்த கருத்தரங்கை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாணவர்கள் மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தார். அவரது நம்பிக்கையை உறுதி செய்யும் விதத்தில் இன்றைய மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டும்.

இங்கே பேசியவர்கள் உழைப்பு இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்கள். அது உண்மைதான், அரசியல் களம் ஆகட்டும், பல்வேறு களங்கள் ஆகட்டும், திறமைகள் எவ்வளவு இருந்தாலும், அந்தத் திறமைகளை வெளிக்கொணருகிற களங்கள் நிச்சயம் அவர்களுக்கு அமைய வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் திறமைகள் வெளிப்பட்டு அவர்கள் வெற்றியாளர்களாக கருதப்படுவார்கள்.

சொல்வதை செய்வோம்

இங்கு வருகை தந்து இருக்கின்ற மாணவர்கள் பலரிடத்தில், பல்வேறு திறமைகள் ஒளிந்து உள்ளன. அவற்றை வெளிக்கொணர வேண்டும். அவற்றை வெளிக்கொணருகின்ற நிகழ்ச்சியாக இந்த ‘சிகரங்களை நோக்கி வரலாறு படைக்கலாம் வா’ என்ற தலைப்பில் சிறப்பான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

ஆம், மாணவர்கள் வரலாறு படைக்க போதுமான கட்டமைப்பு தேவை, ஆக்கப்பூர்வமான பணிகள் தேவை என்ற காரணத்தால் தான், தமிழக அரசு உயர்கல்வித்துறை சார்பில் பத்து கல்லூரிகளும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பத்து கல்லூரிகளும் தொடங்க முதல்வர் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் உத்திரவிட்டார். சிலர் சொல்லுவார்கள், செய்யமாட்டார்கள், ஆனால் திமுக அரசு சொல்வதை செய்யும் அரசாக உள்ளது.

அடுத்த மாதம் கல்லூரி துவக்கம்

அதன் தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத்துறை நான்கு கல்லூரிகளை வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் முதல்வர் துவக்கி வைக்கிறார். இது போன்ற கல்லூரிகளை தொடங்குவதற்கான நோக்கம், ஆண்டு தோறும் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்காமல், படிப்பை தொடர முடியாமல், பொருளாதாரத்தில் தவித்து வரும் 20% மாணவர்களுக்கு மேற்கல்வி படிப்பை தொடர நிச்சயம் இந்த அரசு கல்லூரிகள் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.

இது மட்டுமல்ல, மாணவர்களின் படிப்பு திறனை அதிகரிக்கவும், விளையாட்டு திறனை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் பயனாக வரும்காலங்களில் தமிழக அரசு கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை நிச்சயம் படைக்கும் என்பது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் தா.இளையஅருணா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ஜே.ஜே.எபினேசர் எம்.எல்.ஏ. கல்லூரி முதல்வர் சுடர் கொடி, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், செல்வகுமார், பகுதி செயலாளர்கள் எஸ்.ஜெபதாஸ் பாண்டியன்m வெ.சுந்தர்ராஜன், வழக்கறிஞர் மருது கணேஷ், எல். அருளரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *