சிறுகதை

கல்விச் சேவை | கரூர். அ.செல்வராஜ்

பூக்காரப் பெண் பத்மா. பூ கட்டிக் கொண்டிருந்தாள். அருகில் அவளின் மூத்த மகள் ராதிகா. அவள் ஓரு பள்ளி மாணவி.

‘‘அம்மா’’

‘‘சொல்லும்மா ராதிகா.’’

‘‘மணி 8 ஆச்சும்மா, குளிக்கப் போலான்னு பாத்தா சோப்பு இல்லே. குளிச்ச பின்னாலே தலைக்குத் தேய்க்க எண்ணெய் இல்லேம்மா’’

‘‘ராதிகா! அது இல்லே, இது இல்லேன்னு சொல்றதே உன் வேலையாப் போச்சு. இதையெல்லாம் முன்னாலேயே பார்க்கமாட்டியா?’’

‘‘அம்மா! மறந்துட்டேம்மா. காசு குடுத்தா பக்கத்துக் கடையிலே வாங்கிக்கிறேன்.’’

‘‘கடுகு டப்பாவிலே 100 ரூபா வச்சிருக்கேன். அதை எடுத்துட்டு போய் வாங்கிட்டு வா’’ என்றாள் ராதிகாவின் அம்மா.

பணத்தை எடுத்துக் கொண்டு மளிகைக் கடைக்கு சென்ற ராதிகா குளியல் சோப்பையும் தேங்காய் எண்ணெயையும் வாங்கிக் கொண்டு திரும்பினாள். 10–ம் வகுப்பு படிக்கும் ஜெயலட்சுமி அவள் தம்பியுடன் எதிரில் வருவதைப் பார்த்ததும் சாலை ஓரமாக நின்றாள்.

ராதிகாவைக் கண்ட சந்தோஷத்தில் ஜெயலட்சுமி அவளிடம் பேசினாள்.

‘‘ராதிகா!’’

‘‘சொல்லு ஜெயா’’

‘‘உனக்கு விஷயம் தெரியுமா?’’

‘‘ தெரியாது ஜெயா . நீயே சொல்லு’’ என்றாள் ராதிகா.’’

‘‘ஒரு நல்ல சேதி’’ என்ற ஜெயா அதை ராதிகாவிடம் சொல்லத் தொடங்கினாள்.

‘‘ராதிகா! நேத்து சாயந்திரம் 5 மணிக்கு நம்ம ரேவதி டீச்சர் எனக்கு போன் பண்ணினாங்க. இன்னிக்கு காலையிலே 11 மணிக்கு நம்ம கிராமத்துக்கு வர்றாங்களாம். நம்ம கிராமத்திலே மரத்தடி வகுப்பு வச்சுப் பாடம் நடத்தப் போறாங்களாம். வகுப்பு ஆசிரியரா இருக்கிறவங்க குறைந்த பட்சம் ரெண்டு பாடங்களை நடத்தலாம். நம்ம ரேவதி டீச்சர் அறிவியலையும் ஆங்கிலத்தையும் நடத்தறேன்னு சொன்னாங்க’’ என்றாள் ஜெயலட்சுமி.

ஜெயலட்சுமி சொன்ன விஷயம் ராதிகாவுக்கு பெரிய ஆச்சரியத்தைத் தந்தது. கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையிலே மாணவ –மாணவிகளுக்குப் பாடம் நடத்த வீடு தேடி வரும் ரேவதி ஆசிரியை மனதுக்குள் தெய்வமாக நினைத்து வணங்கினாள் ராதிகா. சந்தோஷ வெள்ளத்தில் நீந்திய ராதிகா தனது தோழி ஜெயலட்சுமியிடம்

‘‘ஜெயா! இந்த சேதியை நீ எனக்கு உடனே சொல்லாததுக்கு காரணம் எனக்குத் தெரியும். அது என்ன காரணம்னா எங்கிட்ட செல்போன் இல்லாதது தான். இப்பவாவது இந்த விஷயத்தை எனக்கு சொன்னியே, அதுக்காக உனக்கு என் நன்றியைச் சொல்லிக்கிறேன் என்றாள் ராதிகா.

சரி, இதையும் கேளு ஜெயா. ஆசிரியர் பணியை ஓர் அறப்பணின்னு சொல்வாங்க. அதில் அர்ப்பணிப்பு அவசியம்னு சொல்லுவாங்க. ஆசிரியர் என்பவர் சேர்க்கிற கரை தோணின்னும் சொல்லுவாங்க. நம்ம ரேவதி டீச்சர் நடமாடுற தெய்வம். அது மட்டுமில்லே பேசும் தெய்வம்.

சரி ஜெயா, நேரமாச்சு. நான் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு சாப்பிடிட்டு ரேவதி டீச்சரின் மரத்தடி வகுப்பிலே பாடம் படிக்கத் தயார் ஆகிறேன்’’ என்று சொல்லி விட்டு வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள் ராதிகா.

கல்விச் சேவையை சிறந்த சேவையாக மாற்றிய ரேவதி டீச்சரின் வருகைக்காக ஆர்வத்தோடு காத்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *