போஸ்டர் செய்தி

கல்விக் கொள்கை மாற்றத்தில் ஈஷா யோகா மையம் அறிக்கை: மத்திய அரசு பரிசீலனை

சென்னை, செப் 11–

‘நதிகளை மீட்டெடுப்போம்’ வெற்றியை தொடர்ந்து ‘இளைஞரும் உண்மையும்’ என்னும் அடுத்த இயக்கத்தை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் துவக்கி இருக்கிறார்.

மார்க்கை (மதிப்பெண்) நோக்கியே கல்வித் திட்டம் பள்ளிகளில் கூடாது; கல்விக் கொள்கையில் மாற்றம் கோரி ஈஷா மையம் தாக்கல் செய்துள்ள ஒரு அறிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்திய இளைஞர்களில் 85% பேர் நாடு, கலாச்சாரம் பற்றி பெருமிதத்தோடு இருக்கிறார்கள்; இந்திய இளைஞர்களின் அபாரத் திறமை – மதிநுட்பத்துக்காக அவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் பெரிதும் விரும்புகின்றன என்று குறிப்பிட்ட அவர், கல்விச் சுமை காரணமாகவே 40% மாணவர்களிடையே மன அழுத்தம்; பதட்டம் ஏற்பட்டு வருகிறது; 2016ம் ஆண்டில் 18 ஆயிரம் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார்.

இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் ‘‘இளைஞரும் உண்மையும்’’ என்ற ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. இதன் தொடக்கமாக இம்மாதம் கோவை, சென்னை, பெங்களூரு, மைசூரு, டெல்லி, ஐதராபாத், மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங், வாராணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 தலைச்சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு இளைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாடுகிறார். இளைஞர்களும், மாணவர்களும் தாங்கள் விரும்பும் எந்தக் கேள்வியையும் சத்குருவிடம் கேட்க முடியும். மேலும் இந்நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள், கேள்வி – பதில்கள், யூ டியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மிகப்பெரியளவில் பிரபலப்படுத்தப்பட இருக்கிறது.

இந்திய இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ள விளையாட்டு வீரர்கள், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய நபர்களும் இந்த முன்னெடுப்பில் ஈஷாவுடன் இணைக்கிறார்கள். இதன் முதல் நிகழ்ச்சி புதுடெல்லியில் ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் கடந்த 3ம் நேததி நடைபெற்றது. 2வது நிகழ்ச்சி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த 7ந் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 3வது நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று (10ந் தேதி) நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் கேள்விகளுக்கு சத்குரு விளக்கமாக பதில் அளித்தார்.

இது சம்பந்தமாக ஜக்கி வாசுதேவ், இன்று காலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இளைஞர்களிடம் கூர்மை சக்தி இருக்கிறது. அதை தெளிவுபடுத்தி, சமநிலை படுத்தினால்.. அவர்களிடமிருந்து மகத்தான சக்தி வெளிப்படும். அதைக் கொண்டு வலிமையான தேசத்தை நிர்மாணிக்க முடியும் என்பது தான் இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம்’ இளைய சமுதாயத்தை சமநிலைப்படுத்தி தெளிவு பெற வைக்காவிட்டால்… எதிர்காலத்தில் அவனது வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு தேசமும் நாசமாகும் என்ற எதிர்பார்ப்பு எச்சரிக்கையை அடுத்த இந்த இயக்கத்தை ஈஷா மையம் கையில் எடுத்திருக்கிறது.

இந்தியாவின் ஒரே சொத்து இளைஞர்கள் தான்…

சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பாதிக்குப் பாதி அதாவது 65 கோடி பேர் இளைஞர்கள். இந்தியாவின் ஒரே சொத்து இந்த இளைஞர்கள் தான். இவர்களில் 85% பேர் இந்தியத் திருநாட்டின் கலாச்சாரம் குறித்து பெருமிதத்தில் இருப்பவர்கள். இந்திய இளைஞர்களில் திறமை மற்றும் அவர்களின் மதிநுட்பம் புத்தி கூர்மைக்காகவே பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களைப் பெரிதும் விரும்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்திய மாணவர்களில் 40% பேர் பாடத்திட்டம் – கல்வி போதனை முறை காரணமாக தேவையில்லாமல் மன அழுத்தம், பதட்டம், பதை பதைப்புக்கு ஆளாகிறார்கள்.

உலகளவில் தற்கொலை அதிகம் இந்தியாவில்

உலகளவில் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியாவில் தான் இளைஞர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இந்தியாவில் ஒரு மாணவன் தற்கொலை செய்வதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இது தவிர பள்ளி – கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை மருந்துகள் பயன்பாடு, ஆண், பெண் பழக்கத்தில் ‘தவறான உறவ’ இவை காரணமாகவும் இளைஞர்கள் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள். இதையெல்லாம் அனுபவத்தில் பார்த்தறிந்து தான் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதைத் தடுத்து நிறுத்தி, அவர்களை சமநிலைப்படுத்தி புதிய பாரதம் படைக்கும் இவ்வியக்கத்தைத் துவக்கியிருக்கிறோம்.

மொபைல்களின் அபரிதமான வளர்ச்சி அதன் தாக்கம், சமூகவலைதளங்களின் தாக்கம் சின்னத்திரை பெரிய திரை ஆகியவற்றின் தாக்கம் அவர்களிடம் இருந்தாலும் கொஞ்சங் கொஞ்சமாக அவர்களை அவற்றின் பிடியிலிருந்து இழுத்து, தாக்கத்திலிருந்து விடுபட வைத்து தங்களுக்குள் இருக்கும் சக்தியை முழு ஆற்றலை உணர்ந்தறியச் செய்வது, உன்னத லட்சியம் நோக்கி நகர்த்தலே இந்த இளைஞரும் உண்மையும் இயக்கமும்.

மார்க்கை நோக்கியே கல்வித் திட்டம் – பாட போதனை இருக்கக் கூடாது என்பது எங்களின் வாதம். அதற்காகவே கல்விக் கொள்கையில் இன்னென்ன மாற்றங்களை செய்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்று கருத்துக்களைப் பதிவு செய்து ஒரு ஆய்வு அறிக்கையை மத்திய அரசின் பார்வைக்கு தாக்கல் செய்திருக்கிறோம்’ அது மனித வளத்துறையின் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது.

கல்வித் திட்டத்தில் 50% பாட போதனை (சிலபஸ்)யில் இருக்கட்டும். மீதி 60% அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் திறமை அடிப்படையில் இருக்கட்டும். கல்வி தரமானதாக இருந்தாலும் பல்வேறு தொழில்துறைகளில் கைவினைத் தேர்ச்சியில் போதிய பயிற்சி இருப்பதில்லை. அதனாலேயே தேர்ச்சி நிபுணத்துவம் இணைந்த எலக்ட்ரீஷியன், கார்பெண்டர், இப்படி பல்துறை தொழிலாளர்கள் உருவாகாமல் இருக்கும் நிலை இருந்து வருகிறது.

இது விஷயத்தில் கைவினைக் கலைஞர்களையும் பள்ளி வளாகத்திலேயே உருவாக்க வேண்டுமானால் அதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை.

மார்க்கை நோக்கிய கல்வித் திட்டம் இருக்கக் கூடாது. அதனால் தான் கல்வி அழுத்தத்தால் தற்கொலைகள் நடக்கின்றன. 2016ல் 18000 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் 15 வயதுக்குட்பட்டவர்கள் 7 ஆயிரத்து 600 பேர். இது வேதனை தரும் செய்தியாகும். இது போன்ற தற்கொலை முயற்சிக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

வகுப்பறைகளில் 50% பாட போதனை போக இசை, நாட்டியம், யோகா, வாழ்க்கைத் தொழில் பயிற்சி என்று மாணவர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

ஈஷா மையம் தத்தெடுத்த 5000 பள்ளிகள்

நாங்கள் (ஈஷா மையம்) எதை அறிவுறுத்தி வலியுறுத்திச் சொல்கிறோமோ அதை செய்து கொண்டிருக்கிறோமோ என்பதை நீங்கள் ஈஷா மையம் தத்தெடுத்திருக்கும் 5 ஆயிரம் பள்ளிகளை நேரில் போய் நீங்கள் பார்க்கலாம். தமிழ்நாட்டில் 460 பள்ளிகளையும், ஆந்திராவியல் சுமார் 4500 பள்ளிகளையும் தத்தெடுத்து இருக்கிறோம். அதில் எங்களின் தரத்தை யாரும் உணரலாம்.

எங்களின் கல்விக் கொள்கை மாற்ற ஆய்வு அறிக்கையை பரிசீலிக்கும் மனித உரிமைக் குழு, அதை நடைமுறைப்படுத்தும் வழிகளை மேற்கொள்ள இன்னும் 2 ஆண்டுகள் பிடிக்கக் கூடும்.

மனு போடும் நிலை இருக்கக் கூடாது

தரமான கல்வியை வழங்குவதில் நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். படித்த படிப்பை முடித்துவிட்டு ‘அப்ளிகேஷன்’ (மனு) போட்டு வேலைக்காகக் காத்திருக்கும் நிலையை நாம் மாற்றியாக வேண்டும். தேர்வு செய்யும் படிப்பை வேலைக்காக தேர்வு செய்யாதே; வாய்ப்புக்காகத் தேடு என்பதில் நாம் உணர்வுபூர்வமாக அறிவுறுத்தி வருகிறோம்.

பாடப் புத்தகத்தில் இருப்பதை மட்டுமே ஆசிரிய பெருமக்கள் சொல்லிக் கொடுப்பதோடு நின்றுவிடக் கூடாது, அவர்களுக்கு வெளி உலகத்தையும் காட்ட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி மின்னல் வேகத்தில் வளர வளர… இன்னும் சில – பல ஆண்டுகள் உருண்டோடும் போது பள்ளிகளே இல்லாமல் போகும் நிலை ஏற்படும். இன்டர்நெட் மூலம் படித்து – வாரம் ஒரு நாள் பயிற்சிக்கு பள்ளிகள் செல்லும் நிலமை வரும்.

விவசாயக் கல்வி அவசியம்

இன்னும் 20 அல்லது 25 ஆண்டுகள் போனால் உணவுப் பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும் சூழ்நிலையும் உருவாகிவிடும். அதை உணர்ந்து விவசாயக் கல்வியை பாடத்திட்டத்தில் புகுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இந்தியாவின் கலாச்சாரம் – பெருமை வாய்ந்தது. தனித்தன்மைக் கொண்டது. அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அது எதிர்காலத்தை வலிமையானதாக நிர்மாணிக்கும் நம் இளைஞர்கள் கையிலேயே இருக்கிறது. இந்நிலையில் உடலையும் – மனதையும் ஒழுங்காகப் பராமரிக்கும் விதத்தில் நாங்கள் யோகக் கலையைப் பயிற்றுவித்துக் கொண்டு வருகிறோம். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் துவங்கிய யோகாக் கலை போதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் ஒரே சொத்து இளைஞர்களே என்பதால் தான் நதிகள் மீட்பு இயக்கம் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘இளைஞர்களும்– உண்மையும்’ என்ற இந்த இயக்கத்தையும் கயைில் எடுத்திருக்கிறோம் வெற்றி பெறுவோம்’.

இவ்வாறு ஜக்கி வாசுதேவ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *