செய்திகள்

கல்வராயன் மலை பகுதிக்கு சென்று ஸ்டாலின் ஆய்வு நடத்த வேண்டும்

Makkal Kural Official

சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜூலை 24–

முதல்வர் ஸ்டாலின் அல்லது அமைச்சர் உதயநிதி, கல்வராயன் மலைப்பகுதிக்கு நேரில் சென்று மக்கள் நிலையை ஆய்வு நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் வசித்து வரும் மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்த கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கைகள் தயாராகி வருவதாகவும், நாளை மறுநாள் அதனை தாக்கல் செய்வதாகவும் கூறினார்.இதை ஏற்று, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், “கள்ளச் சாராயம் மட்டுமே அந்த பகுதி மக்களின் ஒரே ஆதாரமாக உள்ள நிலையில் அதனை ஒழிக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கல்வராயன் மலைப் பகுதியாக உள்ளதால் அந்தப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என அறிவுறுத்தினர்.

மேலும், “அந்த பகுதி மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டுமெனவும் கூறிய நீதிபதிகள், அந்தப் பகுதிக்கு தாங்கள் செல்வதை விட, தமிழக முதல்வர் அல்லது அமைச்சர் உதயநிதி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சருடன் சென்று பார்வையிட்டால் அந்தப் பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை விளையும்” எனவும் கருத்து தெரிவித்தனர்.நாங்கள் சென்று பார்வையிடுவதை விட அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *