செய்திகள்

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி

Makkal Kural Official

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலை

ஸ்ரீவில்லிப்புத்தூர், ஏப். 29–

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலா தேவி (52). அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித உதவி பேராசிரியர். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, தவறாக வழிநடத்தியதாக 2018 மே மாதம் ஆடியோ ஒன்று வைரலானது.

அதையடுத்து, நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்யக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதையடுத்து, நிர்மலாதேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார். நிர்மலா தேவி மீது மாணவிகள் 5 பேரும் புகார் தெரிவித்தனர்.

மாணவிகளின் புகார் கடிதம், நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கடிதம், மாணவிகளுக்கு அவர் அனுப்பிய குறுந்தகவல்கள், கல்லூரி கல்வி இணை இயக்குநரின் அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் 2018, ஏப்ரல் 16-ம் தேதி வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர் விசாரணையில், பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 26-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி ஆஜராகாததால் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று தள்ளிவைக்கப்பட்டது.

தீர்ப்பு இன்று வெளியாவதை முன்னிட்டு, நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு வழங்கினார். மேலும் உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாகத் தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்தநிலையில் குற்றம்சாட்டப்பட்டவர் தனது வாதத்தை தெரிவிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றம் தண்டனை விபரத்தை நாளை அறிவிக்க வேண்டும் என்றும் நிர்மலா தேரவி தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் வாதடினார். தீர்ப்பு கூறிய அன்றே தண்டனை விபரத்தை அறிவிக்க வேண்டும் என்றும் 10 ஆண்டுகளுக்கு குறையாமல் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இரண்டு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பிற்பகல் 2.30 மணிக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *