செய்திகள்

கல்லூரிகளை ஆகஸ்ட்டில் திறக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை

Spread the love

கல்லூரிகளை ஆகஸ்ட்டில் திறக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை

துணை வேந்தர் கிருஷ்ணன் தகவல்

 

மதுரை, மே.23–

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளை ஆகஸ்ட் மாதம் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கல்லூரிகளை திறப்பது, பருவத்தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் கூறியதாவது:-–

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்குற்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் வரும் ஜூலை மாதத்துக்குள் பருவத்தேர்வுகளை நடத்தி முடிப்பது, ஆகஸ்ட் 3வது வாரத்தில் கல்லூரிகளை திறப்பது, நவம்பர் 23ல் வகுப்புகள் முடிவடைந்து. நவம்பர் 24ல் அடுத்த கல்வியாண்டு பருவத் தேர்வுகளை நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் பருவத்தேர்வு முடிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் டிசம்பர் 13 க்குள் வெளியிட்டு டிசம்பர் 14ல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு அந்த பருவம் ஏப்ரல் 4ல் முடிவடைந்து விடும்.

அதில் 2021 மே மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பருவத் தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2 பருவங்களிலும் 90 வேலை நாள்கள் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அடுத்து வரும் சனிக்கிழமைகள் அனைத்தும் வேலை நாட்களாக இருக்கும். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது விடப்படும் விடுமுறைகளும் குறைக்கப்பட்டு வேலை நாட்களாக அறிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் விவாதிக்கப் பட்டு உயர்கல்வித்துறைக்கு பரிந்துரையாக அனுப்பப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வர்களின் கூட்டத்திலும் இந்த பரிந்துரை தெரிவிக்கப்பட்டுள்ளது. உயல்கல்வித் துறை இந்த பரிந்துரைகளை ஏற்று அனுமதிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும். கொரோனா தொற்று பரவல் அதிகரிக்காத நிலையில் இந்த செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கொரோனா தொற்று அதிகரித்தால் அதற்கேற்றாற் போல் முடிவுகள் எடுக்கப்படும் என்று பல்கலைக் கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *