அறைகள் சொல்லும் கதைகள்-31
விரிந்து பரந்து கிடந்த அந்தக் கல்லறைத் தோட்டத்தில் பூபதி முருகனின் கல்லறை இருந்தது. அத்தனை அழகிய வேலைப்பாடுகள் .சுற்றிலும் பூந்தோட்டம் .அது கல்லறை என்று சொல்வதை விட இன்னொரு தாஜ்மஹால் என்று சொல்லலாம். அந்த கல்லறைக்கு வருபவர்கள் எல்லாம் பூபதி முருகனின் கல்லறை அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள தயங்க மாட்டார்கள் .
“என்ன கல்லறையில போயா போட்டோ எடுக்கிறது? இது நல்லா இல்லையே ? “
என்று யாராவது சொன்னால்
” ஏன் தாஜ்மஹால் கூட கல்லறை தான் ? அதுல யாரும் போட்டோ எடுத்துக்கலையா? என்று கேள்வி கேட்டவருக்கு எதிர்ப்பதில் சொல்வார்கள் போட்டோ எடுப்பவர்கள் . அவ்வளவு வேலைப்பாடுகள் நிறைந்த பூபதி முருகனின் கல்லறையைச் சுற்றி இருக்கும் மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்பவர்கள் கூட அந்த கல்லறை தோட்டத்தில் இருந்தார்கள்.
கல்லறைத் திருநாள் வரும்போதும் யாராவது இறந்தால் புதைப்பதற்கு ஆட்கள் அங்கு வரும்போதும் உச்சுக்கொட்டி வியப்பாகப் பார்ப்பது பூபதி முருகனின் கல்லறை தான். எத்தனை எத்தனை வேலைப்பாடுகள் சாகறதுக்குன்னே இந்த ஆள் பிறந்து இருப்பான் போல ? எவ்வளவு அழகா நேர்த்தியா இந்தக் கல்லறைய கட்டியிருக்காங்க ” என்று மூக்கில் விரல் வைத்து வியப்பாகப் பார்க்கும் அளவிற்கு கட்டப்பட்டிருந்தது பூபதி முருகனின் கல்லறை.
” யார் இந்த பூபதி முருகன் ? அவ்வளவு ரசனை காரரா இருப்பாரு போல ?அவர்கள் வீட்டில் இருக்கிற ஆளுகளைத் தான் சொல்லணும் இவ்ளோ வேலைப்பாடுகளோட அடக்கம் பண்ண அந்த கலா ரசிக குடும்பத்துக்கு தான் முதல்ல நன்றி சொல்லணும்” என்று அந்தக் கல்லறையைப் பார்த்து வியப்பவர்கள் எல்லாம் பேசிக் கொள்வார்கள்.
கல்லறையின் கல்லறையில் நடு மையத்தில்” பிறக்கும் போது இங்கு நாம் ஒன்றும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் நாம் ஒன்றும் எடுத்துச் செல்லப் போவதில்லை . வாழும் நாட்களில் மற்றவர்களுக்கு உதவியாக வாழ்ந்து விட்டு மறையுங்கள்” என்ற வாசகம் படிப்பவர்களின் புருவத்தைஉயர்த்தச் செய்யும். அந்தக் கல்லறையை உற்று உற்றுப் பார்ப்பவர்களைப் பார்த்து சிரிப்பார் அந்தக் கல்லறை தோட்டத்தில் இருந்த காவலாளி.
ஆனால், ஒரு போதும் அவர் அந்தக் கல்லறையைப் பற்றிய உண்மையைச் சொன்னதில்லை. வழக்கம் போல யாரோ ஒருவரின் கல்லறையைப் பார்ப்பதற்கு வந்த ஒரு கூட்டம் சுற்றி இருக்கும் கல்லறை எல்லாம் பார்த்துவிட்டு பூபதி முருகனின் கல்லறையைப் பார்த்தார்கள்
“இது என்ன ஆச்சரியம்? இப்படி ஒரு கல்லறையா ? இந்த கல்லறைக்கு 20 லட்ச ரூபாய்க்கு மேல செலவு பண்ணி இருப்பாங்க போல ?இறந்த மனுஷனுக்கே 20 லட்ச ரூபாய்க்கு கல்லறை கட்டியிருந்தாங்கன்னா வாழ்ற மனுசங்க எத்தனை கோடியில வீடு கட்டி வாழ்ந்துட்டு இருப்பாங்க” என்று வியக்காத மனிதர்கள் பாவம் செய்தவர்கள் . இப்படிப் பேசிக் கொண்டிருந்த மனிதரைப் பார்த்த கல்லறை காவலாளி சிரித்தார்.
எதுக்காக இவர் சிரிக்கிறார் ?என்று நினைத்த அந்தக் கூட்டம் காவலாளியைக் கூப்பிட்டார்கள்
” இங்க வாங்க . ஏன் சிரிச்சீங்க? என்று அங்கு வந்திருந்த ஒரு பெண் கேட்க
“இல்ல சும்மா சிரிச்சேன் .என்ன மன்னிச்சிடுங்க” என்றார் அந்தக் காவலாளி.
“இல்ல நீங்க இந்த கல்லறையை நாங்க பார்த்துக்கிட்டு இருந்ததிலிருந்து நீங்க சிரிச்சிட்டு தான் இருக்கீங்க. அப்படி என்ன சிரிப்பா தெரியுதா ? என்று கேட்க மறுபடியும் சிரித்தார் அந்தக் காவலாளி.
” என்னங்க நாங்க பேசிக்கிட்டே இருக்கோம். நீங்க சிரிச்சிட்டு.இருக்கீங்களே ? என்று மறுபடியும் ஒருவர் கேட்க:
எதா இருந்தாலும் உண்மையை சொல்லுங்க. உங்க சிரிப்புக்கு பின்னாடி ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறதா தெரியுது. என்னன்னு தெரிஞ்சுக்கலாமா ?”
என்று இன்னொருவர் கேட்க அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்த அந்தக் காவலாளி
” நான் சொல்றத நீங்க யாருகிட்டயும் சொல்லக்கூடாது அதுக்கு நீங்க சத்தியம் பண்ணா நான் உண்மைய சொல்றேன் என்றார் அந்தக் காவலாளி
” சரி நாங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டோம் “என்ற சத்தியம் செய்ய மறுபடியும் நான்கு திசைகளையும் திரும்பிப் பார்த்த காவலாளி
அந்தக் கல்லறையின் கதையை சொல்ல ஆரம்பித்தார்.
பூபதி முருகன் நல்ல மனுசங்க எல்லாருக்கும் நல்லது செய்யணும்னு நினைக்கிறவர். ஒரு ஈஎறும்புக்கு கூட தீங்கு நினைக்காத ஈர குணம் கொண்டவர்.
மக்களை நேசிக்க கூடிய மனுசன் .அந்த மனுசன் இறந்துட்டாரு அவரப் பாக்கணும்னு கூட்டம் கூட்டமாக வந்து அவர் கல்லறையில் போட்டோ எடுத்துட்டு போறாங்க. நீங்க அவரை பத்திப் பேசுறது. இந்தக் கல்லறை பற்றி பேசுறது இதெல்லாம் அவருக்கு சந்தோசத்தை கொடுக்கும். எனக்கும் இந்தக் கல்லறையை பார்த்துக்கிறதில கூடுதல் சம்பளம் கிடைக்குது” என்று சொல்லிவிட்டு எச்சிலை முழுகினார் அந்தக் காவலாளி .மறுபடியும் நான்கு திசைகளைத் திரும்பிப் பார்த்த காவலாளி
“இன்னொன்னு சொன்னா நீங்க அதிர்ச்சி அடையக் கூடாது? என்று சொன்னபோது
“என்ன சொல்லுங்க” என்று அங்கிருந்தவர் கேட்க.
” அவர்தான் முருகபூபதி அவர் இறக்குறதுக்கு முன்னாடியே கல்லறையைக் கட்டி வச்சு இப்படி இருந்தா எப்படி இருக்கும்? நம்ம கல்லறையை மக்கள் எப்படி ரசிக்கிறாங்க? எப்படி பேசுறாங்க? அப்படிங்கிறதுக்கு ஒரு முன்னோட்டம் பார்த்தார். அது ரொம்ப நல்லபடியா இருக்கு. இப்ப அவருக்கு ரொம்ப சந்தோசம். இறந்தா இதே கல்லறையை தோண்டிட்டு இந்த இடத்திலேயே புதைக்கணும் அப்படிங்கறது தான் அவருடைய ஆசை. அவர் கல்லறையில போட்டோ எடுக்கிறத பத்தி பேசுறது எல்லாமே இங்கு இருக்கிற வீடியோவுல பதிவாகும் அதை வீட்டில இருந்து பார்த்துக்கிருவாரு. , இப்ப நேரிலே வந்துட்டு இருக்காரு “
என்று சொல்லவும் கல்லறை அருகே வந்தார் முருக பூபதி.
வணக்கம் நான் தான் முருக பூபதி. ஒரு மனுஷன் இறந்தா அவனுக்கு என்ன மரியாதை இருக்கும் .ஒரு வீடு கட்டுனா எப்படி எல்லாம் வாழணும்னு மக்கள் நினைக்கிறார்களோ ? அது மாதிரிஒரு மனுசன் இறந்தா அவன எப்படி கொண்டாடுறாங்க அவனுடைய கல்லறைய எப்படி பாத்துக்குறாங்க அப்படிங்கறதுக்காக ஒரு முன்னோட்டத்துக்கு தான் இந்த கல்லறையை கட்டிப் பாத்தேன். எல்லாம் நல்லபடியா தான் போயிட்டு இருக்கு. இந்தக் கல்லறை என்னோட கல்லறை அப்படின்னு சொல்றதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்குங்க ” என்ற போது வந்திருந்தவர்களுக்கு கை கால்கள் உதறின.
“இது என்ன வியப்பா இருக்கு? வித்தியாசமான மனிதரா இருக்கிறாரே ?என்று நினைத்தவர்களிடம்
“வாங்க ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாமா ?
என்று பூபதி முருகன் கூப்பிட
“இது என்ன வில்லங்கமான வேலையா இருக்கு “என்று நினைத்தவர்கள் ,பூபதி முருகனுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்கள் .
கல்லறையில் பூபதி முருகன் பிறப்பு தேதி இருந்தது. இறப்புத் தேதி பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது .
அவரின் கல்லறையின் முன்னே சிரித்துக் கொண்டே புகைப்படம் எடுத்தார் பூபதி முருகன்.