சிறுகதை

கல்யாண மாலை | கரூர் செல்வராஜ்

காலை7 மணி.

பெரிய சந்தையில் மொத்தமாக வாங்கிய காய்கறிகளை 2 சின்னச் சின்ன சாக்கு மூட்டைகளில் போட்டு கட்டிக் கொண்டு தனது வண்டியில் வீடு வந்து சேர்ந்தான் காய்கறி வியாபாரி தனபால்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியை நிறுத்தி காய்கறி மூட்டைகளை பத்திரமாக இறக்கி வைத்தான். இறக்கி வைத்த காய்கறி மூட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று வீட்டு வராண்டா பகுதியில் வைத்துவிட்டு குளிக்க சென்றான்.

குளித்து முடித்ததும் சாமி கும்பிட்டுவிட்டு தனது மனைவி தந்த சூடான சுவையான சுக்கு மல்லி காபி குடித்து குடித்து விட்டு காய்கறி மூட்டைகளை பிரித்தான்.

காய்கறி மூட்டையில் கலந்து கிடந்த காய்கறி வகைகளில் கத்தரிக்காய், புடலங்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பெரியவெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி என்று தனித்தனியாய் பிரித்தான்.

பிரித்து வைத்த காய்கறிகளை கவனமாக எடுத்துச் சென்று தள்ளு வண்டியில் தனித்தனியாக அடுக்கிக் கொண்டிருந்தான்.

அவனது மனைவி தனலட்சுமி உதவி செய்தாள்.

தராசு, எடைக் கற்கள் ஆகியவற்றையும் எடுத்து வண்டியில் வைத்துக் கொண்டதும் மனைவியிடம் சொல்லிவிட்டு தனது தள்ளு வண்டியை வீட்டிலிருந்து நகர்த்தி தெருக்களை நோக்கி நடந்தான்.

காய்கறி விற்பனையின் போது நடந்து கொண்டே தனது உரத்த குரலில் “காய் … காய்’’ … கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய்” என்று கூவிக் கொண்டு சென்றான்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தனி வீடுகள் அமைந்த மல்லிகை, முல்லை, தெருக்களில் காய்கறி விற்பனையை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்வ விநாயகர் கோவில் தெரு பக்கம் வந்தான்.

செல்வ விநாயகர் கோவில் தெருவில் காய்கறிகளை விற்று கொண்டிருந்தபோது தனது நீண்டகால வாடிக்கையாளரும் தன் குடும்பத்தின் மீது அதிகமான அக்கறை கொண்டவருமான சாந்தி அம்மாள் வழக்கம் போல தனக்குப் பிடித்த காய்கறிகளை வாங்கிக்கொண்டு அதற்குரிய பணத்தையும் தந்து விட்டு தனபாலிடம் பேச தொடங்கினாள்.

” தம்பி தனபால் போன வாரம் முழுசும் நீ வரவே இல்லையே ஏன்? உனக்கு உடம்பு சரி இல்லையா?” என்று கேட்டாள்.

அம்மா வயசில் இருக்கிறவரும் அம்மாவைப் போலவே அன்பு காட்டி வருபவருமான சாந்தி அம்மாளிடம் நடந்த உண்மையைச் சொல்ல ஆரம்பித்தான் தனபால் :

” சாந்தி அம்மா! காலேஜ் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த என் சின்ன மகள் சித்ரா மோட்டார் பைக் ரிப்பேர் மெக்கானிக் சுரேசை போனவாரம் திடீர்னு அவளுடைய விருப்பத்தில் பதிவுக் கல்யாணம் செஞ்சுகிட்டா. பெரிய அவமானத்தைத் தேடித் தந்து விட்டாள். அந்த அவமான வேதனையைத் தாங்க முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தேன்.

என் பொண்டாட்டி, நெருங்கிய சொந்தக்காரங்களும் எனக்கு ஆறுதல் சொல்லி மன உளைச்சலை கொஞ்சம் கொஞ்சமாக குறைச்சலாக. அதனாலேயே மறுபடியும் காய்கறி வியாபாரத்தை தொடங்கினேன் ” என்றான் தனபால்.

தனபால் தன் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தருவது போல சாந்தி அம்மாள் ” தம்பி, தனபால், இந்த காலத்து பொண்ணுங்க குணம் வேறு . அதிலே சில பேரு எந்த காரியத்திலும் வேகம் கொண்டு செயல்படுவார்கள். விவேகத்தோடு செயல்பட மாட்டேங்குறாங்க. கடன் போட்டு வாங்கிய ஸ்கூட்டியில் காலேஜுக்கு படிக்கப் போன உன் சின்ன மகள் ஸ்கூட்டியை சர்வீஸுக்கு கொண்டு போனபோது எல்லாம் பேசி இருப்பார்,, நட்பு பிறகு காதலாக மாறி அது கல்யாணத்தில் முடிஞ்சிருச்சு.’ கல்யாண மாலை ‘ எப்படி என்றாலும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கடவுள் போடற முடிச்சு. அதில் மனுஷன் எடுக்கிற முடிவு வேறு. கடவுள் எடுக்கிற முடிவே சரி. அது இருக்கட்டும்; மெக்கானிக்ஸ் கடை, சொந்த கடை அதனாலே அவர் உன் சின்ன மகள் சித்ராவை கண்கலங்காமல் காப்பாற்றுவார். நம்பிக்கையோடு இரு ” என்றாள்.

அதைக் கேட்டு தனபால் மனம் ஆறுதல் அடைந்தது .

புதிய நம்பிக்கையுடன் ‘உரத்த குரலில் “காய் … காய்’’ … கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய்” என்று கூவிக் கொண்டு சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *