செய்திகள்

கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூடியது

கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூடியது

அனைவரும் முககவசம் அணிந்து பங்கேற்பு

சென்னை, செப்.14–

தமிழக சட்டசபை இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடியது.

சட்டசபையை நடத்துவதற்காக கலைவாணர் அரங்கத்தில் 3–வது தளத்தில் பேரவை கூட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

5 நாளில் மிக பிரமாண்டமாக வசதியாக இந்த கூடம் அமைக்கப்பட்டது. இதுதவிர முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர், துணை சபாநாயகர், கொறடா என அனைவருக்கும் தனித்தனி அறைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இன்று முதல், 3 நாட்கள் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சட்டசபை கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தனி சேர் போடப்பட்டுள்ளது. அதற்கு முன்பு மேஜை போடப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி மைக் அமைக்கப்பட்டிருந்தது. குளுகுளு வசதி செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் ஏராளமான மின்விறிசிகள் அமைக்கப்பட்டிருந்தன.

12 தலைவர்கள் படம்

சென்னை கோட்டையில் உள்ள சட்டசபை கூட்டத்தில் 12 தலைவர்களின் படம் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இங்கும் மகாத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், முத்துராலிங்க தேவர், அம்பேத்கார், பெரியார், காயிதே மில்லத், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ராமசாமி படையாச்சியார் ஆகிய 12 தலைவர்களின் படமும் அதற்கு கீழ் அவர்களது பொன் மொழிகளும் எழுதி வைக்கப்பட்டிருந்தன.

தி.மு.க. உறுப்பினர்களுக்கு 7 வரிசைகளும், முதல்வர், அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் பகுதியில் 8 வரிசைகளும் அமைக்கப்பட்டு சேர், மேஜை போடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு சேருக்கும் இடையே 3 அடி இடைவெளி விடப்பட்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

கோட்டையில் உள்ள சட்டமன்ற கூட்டத்தில் முதலமைச்சருக்கு இருந்தது போல இங்கும் தனி மேஜை, சேர் போடப்பட்டிருந்தது. சபாநாயகருக்கு அங்கு இருப்பது போன்று தனி மேடை அமைக்கப்பட்டு, அங்கிருந்த சேர் டேபிள் போடப்பட்டிருந்தது. சபாநாயகர் இருக்கைக்கு இடதுபுறத்தில் செய்தியாளர்களுக்கும், வலதுபுறத்தில் அதிகாரிகள் அமர்வதற்கும் இடவசதி செய்யப்பட்டிருந்தது.

புகைப்பட அடையாள அட்டை

அமைச்சர்கள் வரிசையில் முன்பு முதல் வரிசையில் கடைசியாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இருந்தார். இப்போது இங்கு சமூக இடைவெளியுடன் இருக்கை போடப்பட்டுள்ளதால் ஓ.எஸ்.மணியன் இரண்டாவது வரிசையில் முதல் இடத்தில் இருந்தார்.

சட்டமன்ற கூட்ட அரங்கில் முதலமைச்சருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதனை ஒட்டி முதலமைச்சரின் செயலகத்துக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. சட்டசபையில் செய்தி சேகரிக்க மொத்தம் 53 செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது.

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கு.க. செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு தி.மு.க. வரிசையில் 228–வது இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் இன்று சபைக்கு வந்திருந்தார்.

அனைவரும் முக கவசம்

இன்று சட்ட சபைக்கு வந்த அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

தி.மு.க.வினர் அனைவரும் வெள்ளை நிற முககவசம் அணிந்திருந்தனர். அதில் ‘நீட் தேர்வை ரத்து செய்’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. ஸ்டாலின் உட்பட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் அந்த முககவசத்தை அணிந்திருந்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9.56 மணிக்கு வந்தார். அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றார்கள். அதற்கு முன்னதாக 9.55 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். இதற்கு ஒரு நிமிடம் முன்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன் வந்தனர்.

சட்டசபை முழுவதும் பச்சை நிற தரைவிரிப்பு விரிக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது தளத்திலும் முதலமைச்சருக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதனை ஒட்டி செயலாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சரின் செயலாளர்கள், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு கொறடா ஆகியோருக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

முதல் மாடியில் சபாநாயகர், பேரவை செயலகத்திற்கு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

கபசுர குடிநீர் மாத்திரைகள்

சட்டசபையில் கலந்து கொள்ள வந்த உறுப்பினர்கள் மற்றும் செய்தியாளர்கள், அலுவலர்கள், சபை காவலர்கள் என அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வைத்து ஆக்சிஜன் அளவு சோதனையிடப்பட்டது. ரத்த அழுத்த சோதனையும் செய்யப்பட்டது. அனைவருக்கும் சுடச்சுட கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதுதவிர காய்ச்சல், வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் உள்ளது போல வட்ட மேஜை போடப்பட்டு, அதனை சுற்றி 4 சேர்கள் போடப்பட்டிருந்தன. ஏராளமாக இதுபோன்று அமைக்கப்பட்டிருந்தது.

சட்டமன்ற கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. கலைவாணர் அரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், 53 பத்திரிகையாளர்கள், சில உயர் அதிகாரிகள், உதவியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ‘நெகடிவ்’ வந்தவர்களுக்கு மட்டும் பச்சை நிற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. அந்த அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே 3வது தளத்தில் உள்ள சட்டமன்ற கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

நட்சத்திர ஓட்டலில் மாநாடு நடப்பது போன்று சட்டசபை கூட்டம் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. 5 நாளில் மிக பிரமாண்டமாக வசதியாக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்ததை அனைவரும் பாராட்டினார்கள். இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி அமைத்துள்ளதை கண்டு அனைவரும் வியந்தார்கள்.

206 எம்.எல்.ஏ.க்கள் வருகை

234 பேர் கொண்ட தமிழக சட்டசபையில் 3 இடம் காலியாக உள்ளது. இன்றைய கூட்டத்துக்கு 206 பேர் மட்டுமே வந்திருந்தனர். 25 பேர் வரவில்லை. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதால் அவர்கள் இன்றைய கூட்டத்துக்கு வரவில்லை. நியமன உறுப்பினரும் பங்கேற்கவில்லை.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் மானிய கோரிக்கை விவாதத்துடன் முடிவடைந்தது. அப்போதே, கொரோனா பாதிப்பு தொடங்கியதால், அந்த கூட்டத்தொடர் வேகமாக முடிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆண்டின் 2-வது கூட்டத்தொடரை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால், தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை அரங்கத்தில் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. சபாநாயகர் ப.தனபாலும் அங்கு சென்று ஆய்வு செய்து அனுமதி வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, கலைவாணர் அரங்கத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) பல்வேறு அரசினர் அலுவல்கள் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (16-ந்தேதி) 2020–2021ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை, பேரவைக்கு அளிக்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பான அறிக்கையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை பட்ஜெட்டில் குறிப்பிடப்படும் மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படும். மேலும், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு சட்ட மசோதாக்கள், அவசர சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *