79½ லட்சம் பெண்கள் பதிவு
சென்னை, ஆக.4-
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கான முதற்கட்ட முகாமில் இதுவரை 79½ லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர். 2ம் கட்ட சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
தி.மு.க.வின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், ‘பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன்படி கடந்த 2023–24ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை அண்ணா பிறந்தநாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 15ந்தேதி காஞ்சீபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தின்படி, ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு முதல் கட்டமாக ரூ.1,000 வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக 3 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்ட முகாம்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து முதற்கட்ட சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பப் பதிவு கடந்த 24ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதற்கட்ட சிறப்பு முகாம்கள் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதுவரையில் 79.66 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னையை பொறுத்தவரையில் 1,400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளிலும், 1,700-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்களிலும் முதற்கட்ட சிறப்பு முகாம்களில் 6 லட்சத்துக்கு 25 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. இதில் 4½ லட்சம் பெண்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்துள்ளனர். நேற்றைய சிறப்பு முகாமில் மட்டும் 2½ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட முதற்கட்ட சிறப்பு முகாம் நிறைவடையும் நிலையில் நாளை (சனிக்கிழமை) முதல் 2-வது கட்ட பகுதிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. நேற்று வரையில் 2ம் கட்டப் பகுதியில் 2 லட்சத்து 2 ஆயிரம் குடும்பங்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன. விடுபட்ட குடும்பங்களுக்கு 3வது கட்டமாக சிறப்பு முகாம்கள் வருகிற 17-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்த 2 கட்டத்திலும் விடுபட்டவர்கள் கடைசி வாய்ப்பாக இதனை பயன்படுத்தி கொண்டு படிவங்களை பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரையில் 53 சதவீதம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன”, என்றார்.
நகரம் மற்றும் கிராமப் பகுதிகளை தனித்தனியாக பிரித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.