செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15-ந் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை, ஆக.2-

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை காஞ்சீபுரத்தில் செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

2021-ம் ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தி.மு.க.தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில் கடந்த பட்ஜெட் அறிக்கையில் இந்தத் திட்டம் இடம் பெற்றது.

நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்கள், வேளாண் பணிகளில் ஈடுபடும் பெண்கள், மீனவ பெண்கள் உள்ளிட்ட தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கிடைக்கும் வகையில் 1 கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் ரூ.7 ஆயிரம் கோடி செலவில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணிகள், ரேஷன் கடைகள் அருகே முகாம்கள் மூலம் நடத்தப்படுகின்றன. இந்த திட்டத்தில் சேரும் பயனாளிகளுக்கான தகுதியும் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, குடும்பத் தலைவியாக இருப்பவர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது உள்பட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. தற்போது நடக்கும் முகாம்களில் இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெண்கள் வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 5 லட்சம் பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர்.

இந்த மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி தொடங்க இருப்பதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அண்ணா பிறந்த ஊரான காஞ்சீபுரத்தில் அவரது பிறந்த நாளில் தொடக்கி வைப்பதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15-ந் தேதி காஞ்சீபுரத்திற்கு சென்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதும், தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதந்தோறும் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *