செய்திகள்

‘கலைஞர் பெயரில் உயரிய விருதை உருவாக்குவது தமிழ் வளர்ச்சித்துறையின் இலக்கு’

அமைச்சர் சாமிநாதன் தகவல்

17–ந் தேதி அன்று திருவாரூரில் ஆட்சி மொழிக் கருத்தரங்கு

சென்னை, ஜூலை 13–

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்பெறும் எண்ணற்ற விருதுகளுக்கு முத்தாய்ப்பாக தமிழ் வளர்ச்சித் துறைக்கு தனி அமைச்சகம் அமைத்து, தானே அமைச்சராகவும் பொறுப்பேற்று தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேற்றினை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத்தந்த கலைஞரின் பெயரில் ஓர் உயரிய விருதை உருவாக்குவதுதான் தமிழ் வளர்ச்சித் துறையின் இலக்காக சென்று கொண்டிருக்கின்றோம் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

சென்னையை அடுத்து, ஜூலை 17 அன்று திருவாரூரில் ஆட்சி மொழிக் கருத்தரங்கினை தமிழ் வளர்ச்சித் துறை நடத்தவுள்ளது என்றும் அவர் கூறினார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கினை தொடங்கி வைத்தார்.

கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 38 மாவட்டங்களிலும் 100 ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 6 திங்களில் நடத்தப்பெற திட்டமிடப்பெற்றுள்ளது.

இதன் தொடக்கமாக நேற்று (12–ந் தேதி) சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் முதல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா.செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை ந. அருள் வரவேற்புரை வழங்கினார்.

இவ்விழாவில் முதலாவதாக முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்ட அறிவிப்பான பிறநாட்டு இலக்கியங்களைத் தமிழ்மொழியில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிடும் திட்டத்தின்கீழ் கிரேக்கக் காப்பியங்களான ஓமரின் ‘இலியட்’ மற்றும் ‘ஒடிசி’ ஆகிய நூல்களை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெளியிட்டார். முதல்படியை தமிழ் வளர்ச்சி துறை அரசுச் செயலாளர் இரா.செல்வராஜ் பெற்றுக் கொண்டார். நூலின் மொழிபெயர்ப்பாளர் பொன். சின்னத்தம்பி முருகேசன் ஏற்புரை வழங்கினார்.

அமைச்சர் சாமிநாதன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசியதாவது:–

நமது பண்பாட்டின் மலர்ச்சிக்கு, கலைகளின் எழுச்சிக்கு அடிவேராக அமைந்த அன்னை தமிழின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களைத் தீட்டியவர் கருணாநிதி. நம் தமிழ், வெறும் காட்சிமொழியாக மட்டுமல்லாமல், ஓர் ஆட்சிமொழியாகவும் இருக்கவேண்டும் என்பது கருணாநிதி கண்ட கனவு.

கருணாநிதியின் அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியில் கலைஞர் நூற்றாண்டில் களமிறங்கி இருக்கிறது இந்த தமிழ் வளர்ச்சித் துறை.

சங்க இலக்கியத்தில், பயன்படுத்தப்பட்ட சொற்களான அடகு, அண்ணல், அயலார், அரங்கு, அரசியல், ஆவணம், கட்டளை, கழகம், கூலி, சான்று, சிறுதொழில், சீருடை, தகைமை, நிதி, நுகர்வோர், பேரணி, மண்டபம், மாட்சி, வழங்குநர் என்பன போன்ற சொற்கள் இன்றும் ஆட்சிச் சொற்களாக வழங்கி வருவதை எண்ணும் பொழுது தமிழ்மொழியின் தொன்மைக்கு இவற்றைவிடப் பெருமிதம் என்னவென்று சொல்வது.

தமிழிலேயே பதிவேடுகள்

சட்டம், ஆணைகள், அரசாணைகள், அறிவிக்கைகள், அறிவிப்புகள், கடிதங்கள், குறிப்பாணைகள் அனைத்தும் தமிழிலேயே செயற்படுத்துவதில் தமிழ் வளர்ச்சித் துறை முனைந்து ஈடுபட்டுவருகிறது.

அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழிலேயே கையொப்பம் இடுதல், பெயர்களின் முன்னால் இடம்பெறும் தலைப்பெழுத்துகள் தமிழிலேயே எழுதப்படும் முறையையும் பின்பற்றச் செய்தல், ஆட்சிமொழித் திட்ட விதிமுறைகளின்படி, பதிவேடுகள் அனைத்தும் தமிழிலேயே பேணப்படுவதையும், தமிழில்தான் அச்சிட்டு வழங்க வேண்டும் என்பதும் இன்றியமையாதப் பணிகளாகும்.

வணிக நிறுவனத்தின் பெயர்ப் பலகைகள் தமிழில்தான் முதலில் இடம்பெறுதல் வேண்டும். இரண்டாவதாக ஆங்கிலப் பெயரும், தேவைப்படின் பிற மொழிக்கும் என 5:3:2 என்ற எழுத்து வடிவில் இருக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அவ்வாணைக்கிணங்க, தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவரும், உறுப்பினர்களும் அரசுடன் இணைந்து தமிழில் பெயர்ப் பலகைகளைத் தட்டாமல் வைப்போம் என்று இசைவு தெரிவித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நெல்லை ஜெயந்தா

தொடர்ந்து கவிஞர் நெல்லை ஜெயந்தா ‘‘கலைஞர் நிகழ்த்திய செம்மொழி செயற்பாடுகள்’’ என்ற தலைப்பிலும், முன்னாள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் கூ.வ. எழிலரசு,‘‘ காலந்தோறும் தமிழ் ஆட்சிமொழி வரலாறு’’ என்ற தலைப்பிலும், சேலம் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் க. பவானி ’’குறிப்புகள் வரைவுகள் எழுதுதல் தொடர்பில் தீர்வுகள்’’ என்ற தலைப்பிலும்,

வழக்குரைஞர் ஆக்கம் மதிவாணன் ‘‘அரசுப் பணியாளர்களும் ஆட்சிமொழி சட்டமும்’’ என்ற தலைப்பிலும், வல்லமை மின்னிதழ் ஆசிரியர் அண்ணா கண்ணன், ’’கணினித் தமிழ்’’ என்ற தலைப்பிலும், முனைவர் ஆ. மணவழகன், ‘‘மொழிப்பயிற்சி’’ என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றி கருத்தரங்கத்தை சிறப்பித்தனர். இக்கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கோபிநாத் ஸ்டாலின்

இவ்விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர்(பொ) கோபிநாத் ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பொ.பாரதி, பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *