செய்திகள்

கலைஞர் கருணாநிதி 100 ரூபாய் நாணயம் வெளியீடு: வரவேற்போம் வாழ்த்துவோம்

Makkal Kural Official

எக்ஸ் தளத்தில் கவிஞர் வைரமுத்து வரவேற்பு

சென்னை, ஆக. 18–

கலைஞர் கருணாநிதி 100 ரூபாய் நாணயத்தை ஒன்றிய அரசு இன்று வெளியிடுகிறது வரவேற்போம்; வாழ்த்துவோம் என கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஒன்றிய அரசு கருணாநிதி நினைவு 100 ரூபாய் நாணயத்தை இன்று வெளியிடுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடக்கும் இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

வைரமுத்து வாழ்த்து

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது:–

‘கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஒன்றிய அரசு இன்று வெளியிடுகிறது வரவேற்போம்; வாழ்த்துவோம்! காலமெல்லாம் இந்தியை எதிர்த்த கலைஞர் நாணயத்தில் இந்தியா? என்று சில தோழர்கள் வினவுகிறார்கள். அவர்களுக்கு அன்போடு ஒருசொல்: இந்தியப் பணத்தாளில் இந்தியோடு தமிழும் விளங்குவதால் அது சமன்செய்யப்படுகிறது; ஏற்றுக்கொள்கிறோம்.

கலைஞர் நாணயத்திலும் இந்தியோடு, ‘தமிழ் வெல்லும்’ என்ற கலைஞர் கையெழுத்தும் இடம் பிடித்திருப்பதால் இங்கும் அது சமன் செய்யப்பட்டுவிட்டது. வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு? களிப்புறுவோம் களங்கம் எதற்கு? நிலவை ரசிப்போம்’ என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *