செய்திகள்

கலைஞர் கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது

சென்னை, ஆக. 13–

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3–ந்தேதி முதல் ஆண்டுதோறும் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:–

* சட்டமன்றத்தின் நூற்றாண்டை குறிக்கும் வகையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த மன்றத்தில் 1921–ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும். பேரவையின் நிதிக்குழுக்களின் (மதிப்பீடு, பொதுக் கணக்கு, பொதுத்துறை நிறுவனங்கள்) செயல்பாட்டை வலுப்படுத்துவதற்காக, உரிய அலுவலர்களுடன் கணினிமயமாக்கப்பட்ட சிறப்புச் செயலகம் அமைக்கப்படும்.

கருணாநிதி செம்மொழி விருது

* சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். 2010 முதல் வழங்கப்படாமலிருக்கும் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, இனி ஒவ்வோராண்டும் ஜூன் மாதம் 3ந் தேதி, 10 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும்.

* தலைமைச் செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்துத் துறை அலுவலகங்கள் வரையிலும், தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.

தமிழில் தொழில்நுட்ப புத்தகங்கள்

* உலக அளவில் போற்றப்படும் தமிழ்ப் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.

* இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறைப்படி மேற்கொள்ள, நாட்டில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிக அளவாக, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

* கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.

* தேசிய கடல்சார் நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து, முதற்கட்டமாக சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *