அமைச்சர் பெரியசாமி ஆய்வுக் கூட்டத்தில் தகவல்
சென்னை, ஏப் 10–
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரகம், பனகல் மாளிகை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வளர்ச்சித் திட்டங்களின் பணிமுன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சரின் அறிவிப்புகளின் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்புகள் புதுப்பிக்கும் திட்டம் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2024–-25-ன் கீழ் ஒரு லட்சம் வீடுகள் இலக்கு வழங்கப்பட்டு இதுநாள்வரை 30,236 வீடுகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. 13,388 வீடுகளின் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. மீதமுள்ள வீடுகள் கட்டும் பணி பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளது. இவை அனைத்தும் மே 2025 மாதத்திற்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நாளது தேதிவரை ரூ.2733.51 கோடி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.2597.51 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2025–-26–ம் ஆண்டின் கீழ் ரூ.3,500 கோடியில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஒரு லட்சம் வீடுகள் புதிதாக கட்டப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதத்தில் நாளது தேதிவரை. இத்திட்டத்தில் 76,608 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
2000–-01–ம் ஆண்டிற்கு முன் பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ள சுமார் 2.50 லட்சம் ஊரக குடியிருப்புகள் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வரும் இரண்டு ஆண்டுகளில் பழுது நீக்கம் செய்யப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பின் படி, 2024–-25–ம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் ஓடு மற்றும் சாய்தள கான்கிரீட் வீடுகளில் உள்ள சிறு பழுது மற்றும் பெரும் பழுது நீக்கப் பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 99,219 எண்ணிக்கை வீடுகளுக்கு ரூ.812 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதில் 93,682 வீடுகளின் பழுது நீக்கம் பணி நிறைவுபெற்றுள்ளது. இப்பணிகளை நிறைவேற்ற தற்போது வரை ரூ.725 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டம் கட்டம்-II-ன் கீழ் சிறு மற்றும் பெரும்பழுது நீக்கப்பணிகள் மொத்தமாக 14,469 எண்ணிக்கைக்கு ரூ.140.34 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஆணையர் பா.பொன்னையா, கூடுதல் இயக்குநர் ர.அனாமிகா, இயக்ககத்தின் அனைத்து கூடுதல் இயக்குநர்கள், தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள், மாவட்டங்களின் கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.