செய்திகள்

கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் சமூக ஆர்வலர்களுக்கு ஆலோசனை

Spread the love

சிவகங்கை, ஏப்.2–

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு உறுதுணையாக பணி மேற்கொள்வது தொடர்பாக சமூக ஆர்வலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபால் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமூக ஆர்வலர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன் மேலும் தெரிவிக்கையில் :–

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனைப்படி கொரோனா வைரஸ் பரவுவதல் தடுப்பதற்கான பணிகள் சீரியமுறையில் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் முழுமையாக வெற்றியை பெறமுடியும். அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, ஊராட்சி நிர்வாகம், பேரூராட்சி, நகராட்சிகள், வேளாண்மைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியத்துறைகள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வரும் நிலையில் பொதுமக்களும் அதற்கேற்ப முழுஒத்துழைப்பை கொடுத்தால்தான் முழுமையாக வைரஸ் பரவுவதலை தடுக்க முடியும். அதற்கு சமூக ஆர்வலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வரவேண்டும். காரணம் கிராமப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் வேண்டி அவ்வப்போது நகர்ப்பகுதிகளுக்கு வருவதும் அதேபோல் நகர்ப்பகுதியிலுள்ள மக்களும் அவ்வப்போது கடைகளுக்கு வருவதும் என அடிக்கடி மக்கள் கூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

144 தடை உத்தரவின் நோக்கம் பொதுமக்கள் ஒன்று கூடாமல் தனிமைப்படுத்துவதன் மூலம் நோய் தாக்குதலை தடுக்க முடியும் என்ற எண்ணம் ஆகும். அதை நிறைவேற்றி மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் வெற்றி பெற பொதுமக்களும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அந்தந்தப் பகுதியிலேயே உடனுக்குடன் செய்திட சமூக ஆர்வலர்கள் முன்வந்தால் இதுபோன்ற தேவையற்ற மக்கள் கூட்டங்களை தவிர்ப்பதுடன் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் முக்கிய தேவைகள் நிறைவேற்றப்படும். மற்றபடி சுகாதாரத்தை பொறுத்தவரை தூய்மைப்பணிகள் மற்றும் கிருமிநாசினி மருந்துகள் தெளிப்பதற்கும் மருத்துவ பரிசோதனைக்கும் மாவட்ட நிர்வாகம் இரவு பகல் பாராமல் அயராது பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு உயிரும் விலை மதிக்க முடியாத ஒன்று. அதை காப்பாற்றுவது அரசின் கடமை என பாரதப் பிரதமரும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் அயராது பணியாற்றி வருகிறார்கள்.

அவர்களின் எண்ணம் நிறைவேறும் வகையில் ஒவ்வொருவரும் தங்களாகவே தனிமைப்படுத்தி சுகாதாரத்தை பாதுகாத்து ஆரோக்கியமாக இருந்திட வேண்டும். பொதுமக்களாகிய நீங்கள் நினைத்தால் முடியாததது ஒன்றும் அல்ல. எனவே இன்று முதல் சவாலாக எடுத்து தேவையற்ற பயணத்தை தவிர்த்து ஏப்ரல் 14 வரை வீட்டிலேயே இருந்து நோய் தாக்குதலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். அதற்கு சமூக ஆர்வலர்களும் உறுதுணையாக இருந்து பணியாற்ற வேண்டுமென மாவட்ட கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.யசோதாமணி, தமிழ்நாடு ஆலோசனைக் குழு உறுப்பினர் வெள்ளையன், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் மரு.மீனாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *