எழுத்தாளர்: ஜூனியர் தேஜ்
(சமூக நாவல்)
புஸ்தகா பதிப்பகம்,
புதிய எண்: 7 – 002,
மாண்டி ரெசிடென்சி,
பன்னகெட்டா மெயின் ரோடு,
பெங்களூரு –56 00 76.
இந்நூல் முழுவதும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் தஞ்சை வட்டாரத் தமிழில் மலர்ந்திருப்பது முதற்சிறப்பு.
அந்தனூர் கிராமத்தில் நடந்த ஒரு சாவுக்கு தப்பு அடிப்பவர்களை அழைக்கப்போய்விட்டு திரும்பி வந்தவரிடம் ஒப்பாரி வைக்கும் மூதாட்டி, ‘‘ ஏண்டா மாணிக்கம் , தப்பு தம்புசாமியை கையோட அழைச்சிட்டு வரலாமில்ல. நீ அவசரமா இங்க வந்து எந்தப்பாடையிலே போகப்போரே?… என்று வெள்ளந்தியாக கேட்கிறபோது என்ன எகத்தாளம், நையாண்டி ; முதல் அத்தியாயத்திலேயே களை கட்டிவிட்டது கதை.
சாவு வீட்டில் ஒப்பாரி வைத்து பாடிக்கொண்டிருந்த மூதாட்டி காதில் ஒருவர் ‘‘என் மருமகளுக்கு பிரசவ வலி….’’ என்று கலக்கத்தோடு சொல்கிறார்.
‘‘கலங்காதே. இப்போ தலை முழுகிட்டு வந்தர்றேன் என்று சொல்லி விட்டு எழுந்து போய் குளித்துவிட்டு பிரசவம் பார்த்துவிட்டு வருகிறார் மூதாட்டி.
எப்பேர்ப்பட்ட மனித நேயம். கிராமத்து ஏழை மக்களின் மகத்தான மாண்புகளை காட்சிகளாக நகர்த்தி கதை சொல்லிக்கொண்டு போகிறார் நாவலாசிரியர் ஜூனியர் தேஜ்.
‘ எவ்வழி நல்வழி ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே ’ என்று ஈராயிரம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்தது போன்ற அதே பண்பு நலன்களோடு வாழும் மக்கள் இன்றும் தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ; அத்தகையோரைத்தான் இந்தக் கதையின் மாந்தர்களாக்கி இந்த சமூக நாவலை பொறுப்புடனும் யதார்த்தத்துடனும் படைத்திருக்கும் நாவலாசிரியர் ஜூனியர் தேஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சாதி சனம் என்ற பாகுபாடு பார்க்காமல் அன்போடு உறவாடும் பெருந்தகையாளர்களான கிராம மக்களின் பிள்ளைகளைக் கொண்ட புரட்சிகரமான காதல் கதையையும் நாவலின் ஊடே விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் வடித்திருக்கிறார் நாவலாசிரியர் ஜூனியர் தேஜ்.
தனக்குச் சொந்தமான் மூன்று ஏக்கர் நிலத்தில் கிராமச்சுடுகாட்டுக்கு பொதுப்பாதை, பொதுக்குளம் , நெல் போர்அடித்து உலர்த்தும் பொது களம், அரசு நேரடி நெல் கொள்முதல் செய்ய தனிஇடம், குளத்து நீர் வழிந்தோட பொது வாய்மடை மதகு (மதவு) பாலம் கட்டித்தர வாழ் நாள் முழுவதும் விடாமுயற்சி செய்யும் ஏழை விவசாயத் தொழிலாளி கலியன் அதில் வெற்றி பெற்றாரா ? என்பதைக் கூறுவதே கதைக் களம். அதைச் சிறப்பாக எழுதிக்காட்டி கலியனை மாமனிதனாக உயர்த்திக்காட்டிய கதாசிரியர் ஜூனியர் தேஜ் பெரும் வெற்றி பெற்றுவிட்டார்.
சிறுகதை ஆசிரியராக இருந்த இவர் தமது முதல் நாவலிலேயே படிப்போரை மெய்சிலிர்க்க வைத்துவிட்டார்.
வாழ்த்துக்கள்.
அட்டை பொலிவு. அச்சும் அமைப்பும் அழகு.
413 பக்கங்கள் கொண்ட கலியன் மதவு அச்சிட்டு வெளியிட்ட புஸ்தகா பதிப்பகத்துக்குப் பாராட்டுக்கள்.
இந்நூலின் விலை ரூ. 620 .
விலை கொடுத்து வாங்கிப்படிக்கத் தகுதியான விலைமதிப்பு மிக்க நூல் கலியன் மதவு. வாங்க முடியாதவர்களுக்கு வாங்கிப்பரிசாக கொடுக்கலாம்.
– மதிப்புரை:– இரா.குணசேகரன்.