2 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு
வாஷிங்டன், ஜன. 11–
கலிபோர்னியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வௌ்ளச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 17 பேர் பலியானார்கள். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பெய்து வரும் புயல் மழை அந்த மாகாணத்தையே புரட்டி போட்டுள்ளது. அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பல மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தொடர் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
புயல், மழை காரணமாக கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு மின் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கி உள்ளது. கடும் பனி காரணமாக ஏற்கனவே 3 கோடிக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கனமழை முதல் மிக கனமழை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் மேலும் அச்சம் அடைந்துள்ளனர்.
17 பேர் பலி
மழை-வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கலிபோர்னியா மாகாணத்துக்கு மேலும் மழை ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா கவர்னர் கெவின் நியூசோம் கூறும்போது, மழை-வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆபத்து இருப்பதாக தெரிகிறது. இந்த பாதிப்பு வருகிற 18-ந்தேதி வரை இருக்கும் என்று தெரிகிறது.