செய்திகள்

கலவரத்தை ஏற்படுத்த நினைத்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்: சேகர்பாபு

Makkal Kural Official

சென்னை, பிப்.5–

திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படுத்த நினைத்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என பா.ஜ.க.வினரை அமைச்சர் பி.கே. சேகர்பாபு எச்சரித்துள்ளார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சென்னை, ஓட்டேரி ஆதி படவேட்டம்மன் திருக்கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–

இந்த அரசு ஏற்பட்ட பின், இதுவரை 2,504 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளதோடு, வருகின்ற 9 மற்றும் 10 தேதிகளில் 71 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திட அரசு ரூ.300 கோடியை மானியமாக வழங்கியுள்ளதோடு, திருக்கோயில் மற்றும் உபயதாரர்கள் நிதி ரூ.131 கோடியையும் சேர்த்து ரூ.431 கோடி மதிப்பீட்டில் 274 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று ஆய்வு செய்யப்பட்ட ஓட்டேரி ஆதி படவேட்டம்மன் கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளில் உபயதாரர்கள் மட்டும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை மேற்கொள்கின்றனர். இத்திருக்கோயிலுக்கு வருகின்ற மார்ச் 3–ம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கிற்கு இக்கோயிலின் சுற்றுபகுதியில் உள்ள 2,500 குடும்பங்களுக்கு மஞ்சள், குங்குமம் வழங்கி அழைப்பு விடுக்கப்படுவதோடு, குடமுழுக்கு அன்று 5,000 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.

திருப்பரங்குன்றம் மலை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தயவு செய்து இந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். எங்களுடைய கண்ணோட்டத்தை பொறுத்தளவில் அதில் முழுக்க ஈடுபட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் என்று தான் நான் குற்றம் சாட்ட விரும்புகிறேன். ஏதோ ஒரு எண்ணத்தை மையமாக வைத்து, இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுகின்றனர். திருப்பரங்குன்றம் திருக்கோயிலை பொறுத்த அளவில் நேற்றைக்கு அங்கே ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி மதவாதம், இனவாதம், மொழிவாதம் என்று பிரிவுகளை ஏற்படுத்த நினைத்தார்கள். வட மாநிலங்களில் வேண்டுமென்றால் இதற்கு உண்டான சாத்திய கூறுகள் அமையக்கூடும். எச். ராஜா, அண்ணாமலை போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் எங்கள் முதல்வர் எங்களை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லி இருக்கின்றார்.

கலவரம் செய்தால்…

நீங்கள் வட மாநிலங்களைப் போல் இங்கும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். இங்கே இருக்கின்ற முதல்வர் உறுதிமிக்க முதல்வர், இரும்பு மனிதர். எங்கு கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கின்றார். ஆகவே இந்த பெரியார் மண்ணில், திராவிட மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஒரு காலமும் அனுமதிக்க மாட்டார்.

திருப்பரங்குன்றம் மலையைப் பொறுத்தளவில் 1920–ம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்றமும், 1930–ம் ஆண்டு லண்டன் பிரிவி கவுன்சிலும் ஒரு உத்தரவை வழங்கி இருக்கின்றது. அதைத்தொடர்ந்து 1958, 1975, 2004, 2017, 2021 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்றன. 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

கடந்த காலங்களில் எந்தெந்த அடிப்படையில் ஏழு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவு வழங்கியதோ அந்த நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்றார்போல் தான் இந்த அரசு அதை மதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை வைத்து அரசியல் குளிர்காயலாம் என்று இந்த பிரச்சனையை கையில் எடுப்பவர்களுக்கு சொல்லிக் கொள்வது, எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையோடு செயல்படும் இந்த அரசு நீதிமன்றம் என்ன வழிகாட்டுகின்றதோ அதன்படி தான் செயல்படும்.

முதலமைச்சர் அனுமதியோடு கூடிய விரைவில் துறையின் அமைச்சர் என்ற வகையில் அந்த மலைக்கு செல்ல இருக்கின்றேன். திருக்கோயில் நிர்வாகம் மற்றும் தர்கா தரப்பினருக்கும் வழிபாட்டு முறைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீதிமன்ற உத்தரவு அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு வருகின்றன. அங்கே இஸ்லாமியர்களும், இந்துக்களும் மாமன் மச்சான்களாக சகோதரத்துவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழகத்தில் அவர்களை அன்னியப்படுத்தி அதன் மூலம் தேர்தலில் லாபம் காணலாம் என்று நினைக்கின்றார்கள்.

இந்த பிரச்சனையில் அவர்கள் எடுத்திருக்கின்ற நடவடிக்கைகளால் மக்கள் வெகுண்டெழுந்து 2026–ம் ஆண்டு தேர்தலில் அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நேற்றைக்கு அங்கே கூடிய கூட்டத்தை பார்த்திருப்பீர்கள். ஒரு மதத்திற்கு ஒரு இனத்திற்கு எதிராக தான் கோஷங்களை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஆட்சியைப் பொறுத்தளவில் ஏற்கனவே என்ன வழிபாட்டு நெறிமுறைகள் இருந்ததோ என்ன வழிபாட்டை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்களோ, அதுவே தொடரும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முதலமைச்சர் செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மேயர் பிரியா, அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், சென்னை மண்டல இணை ஆணையர் ஜ.முல்லை, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மண்டல அலுவலர் எ.எஸ்.முருகன், மாநகராட்சி உறுப்பினர் எஸ்.தமிழ்செல்வி, திருக்கோயில் செயல் அலுவலர் எம்.ஆச்சி சிவபிரகாசம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *