சென்னை, செப் 01
சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான சேவையை தொடங்கிய, தனது 45 வது ஆண்டு கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளது.
சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ந்தேதி தனது விமான சேவையை தொடங்கியது. அப்போது, ஏர் லங்கா என்ற பெயரில் விமான சேவையை தொடங்கிய இலங்கை, இன்று 62 நாடுகளில் 114 நகரங்களுக்கு தனது சேவையை விரிவாக்கி, உலகலாவிய விமான சேவை நிறுவனங்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து சிறீலங்கன் ஏர்லைன்சின் தலைவர் அசோக் பத்திரகே கூறும்போது, பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில், சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த பிராந்தியத்தில் மிக பழமையான வணிக விமான சேவை நிறுவனங்களில் முக்கியமானதாக விளங்கி வருகிறது. பல்வேறு இடர்பாடுகள் இருந்த போதிலும், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான சேவை அளிப்பதில் தொடர்ந்து, எங்கள் கவனத்தை செலுத்தி வருகிறோம்.
அபாரமான வளர்ச்சி
பெரிய இடவசதி கொண்ட A330, A321 வகை ஏர்பஸ் விமானங்களுடன் நடுத்தர வசதி கொண்ட A320 உள்ளிட்ட முக்கியமான விமானங்களை சிறீலங்கன் ஏர்லைன்ஸ் இயக்கி வருகிறது. தற்போதைய நிலையில், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், இந்திய துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் தூர கிழக்கு நாடுகள் என, அனைத்து முக்கிய பகுதிகளிலும் உள்ள முதன்மையான நகரங்களுக்கு தரமான விமான சேவையை வழங்கி வருகிறது.
1979 ஆம் ஆண்டில், ஏர் லங்கா என்ற பெயரில், இரண்டு 707 போயிங் விமானங்களுடன் தொடங்கப்பட்ட விமான சேவை, 20 ஆண்டுகளுக்கு பிறகு 1999 ஆம் ஆண்டில், சிறீலங்கா ஏர்லைன்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் 50 வது நகரமாக கோவா மாநிலத்துக்கு தனது விமான சேவையை விரிவாக்கம் செய்த நிலையில், 2016 ஆம் ஆண்டில் மாலத்தீவில் உள்ள கான் தீவுக்கு விமான சேவையை தொடங்கிய ஒரே பன்னாட்டு விமான சேவை நிறுவனமாக இன்று வரையில் இருந்து வருகிறது.
சுய சேவை வசதி
2017 ஆம் ஆண்டில் ஐதராபாத், கோவை, விசாகப்பட்டினம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஆகிய நகரங்களுக்கு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. அத்துடன், 2023 ஆம் ஆண்டில், விமான நிலைய தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான SITA வின் சுய சேவை செக்-இன் மற்றும் பேக் டிராப் வசதியை அறிமுகப்படுத்திய தெற்காசியாவின் முதல் விமான சேவை நிறுவனமாக சிறீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு தொழில்நுட்ப பாய்ச்சலை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
விமான சேவை வழங்குவதில் களங்கரை விளக்கமாக திகழும், சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், உலகளாவிய விமான சேவை தரத்தை கடைபிடித்து, நிலையான வளர்ச்சி மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் தனது 45 வது ஆண்டில் அடி எடுத்து வைப்பது பாராட்டுக்குரிய ஒன்றாக உள்ளது.