செய்திகள்

‘கற்பூர புத்தி’ காவ்யா; ஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனை வர்ணத்தில் மகுடி முன் பாம்பான ரசிகர் கூட்டம்!

எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி சக்கரபாணியின் கொள்ளுப் பேத்தி

குரு தேவிபிரியா ஸ்ரீராமின் நடனப் பயிற்சிக்கு பாராட்டு

“தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது- நம்பி …உன்னை நம்பி”

இயக்குனர் பிரியதர்ஷன் தமிழுக்கு அறிமுகமான படம் “ கோபுர வாசலிலே” (1991). இதில் இடம் பெற்று பட்டி தொட்டிகளில் எல்லாம் பரபரப்பாக ஒலித்த இந்த பாடல் தான் சட்டென்று நினைவலைகளில்.

காவ்யா, 14 வயது. கலைக் குடும்பத்து வாரிசு. பொன்மனச் செம்மல் எம்ஜிஆரின் அண்ணன் எம் ஜி சக்கரபாணியின் புதல்வர், வழக்கறிஞர் எம்ஜிசி பிரபாகரின் பேத்தி.

மயிலை ஆர்.கே. சுவாமி ஹாலல் மேடையின் மையத்தில் காவ்யா வந்து நின்ற அந்தக் கணத்தில். அதுவும் சண்முகத் தாயின் ஒப்பனையில்.

வெண்ணிற ஆடையைப் போலவே பட்டொளி வீசும் பொன்னிற ஆடையில்… காவ்யாவை கண்ணெதிரில் பார்த்த அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் ‘படபடவென்று’ கரவொலி எழுப்பியது, காவ்யாவின் தோற்றப் பொலிவுக்கே கிடைத்திருக்கும் முதல் வெற்றி.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சாமி சபாவின் பாரத் நிருத்ய உத்சவ் நாட்டிய விழாவில் காவ்யாவின் நிகழ்ச்சி. ஆச்சாரிய கலா விபஞ்சி குரு ஸ்ரீதேவி பிரியா ஸ்ரீராமின் சிஷ்யை (8ஆண்டுகளாக பயிற்சி)

முருகனைப் போற்றும் சண்முக கவுத்துவம் – நிகழ்வின் துவக்கம். விறுவிறுப்பாக ஆடி சிறப்பாக துவக்கினார் காவ்யா.

திருவையாறு தியாக பிரம்மம் வழியில் வந்த குரு ஸ்ரீதேவி பிரியா ஸ்ரீராம், ஹ தியாகராஜரின் பஞ்ச ரத்ன கீர்த்தனையான ‘‘ஜெகதானந்த காரகாவை…” தேர்ந்தெடுத்து வர்ணம் வடிவில் மிக அழகாக அமைத்து காவ்யாவை பயிற்றுவித்து மேடை ஏற்றினார்.

40 நிமிட நேரம்- விறுவிறுப்பான ஆட்டம். அங்க சுத்தம், அடவு சுத்தம். முக பாவங்கள்- பிரமாதம் என்று பிரமிப்பில் ஆழ்த்தி பார்வையை அக்கம் பக்கம் திருப்ப வைக்காமல் காவ்யாவின் அசைவையே ரசிக்க வைத்தது. அது யாருடைய வெற்றி?

சிஷ்யை காவ்யாவுக்கா…? குரு தேவிப்பிரியா ஸ்ரீராமுக்கா? வாய்ப்பாட்டு சித்ராம்பரி கிருஷ்ணகுமாரின் வசீகரக் குரலோடு இணைந்த பக்கவாத்தியக் குழுவுக்கா? (நாகராஜன்- மிருதங்கம், தேவராஜ் – புல்லாங்குழல், கலையரசன்- வயலின்).

கேள்விக்கு வரும் ஒரே பதில்: குருவின் பயிற்சியில், சிஷ்யனின் பக்தி சிரத்தையில், பக்கவாதிக்காரர்களின் அனுபவ முதிர்ச்சியில்- வெற்றி!

தொடர்ந்து அன்னமாச்சாரியாரின் “பிரம்மம் ஒக்கட்டே..” பாடலுக்கு காவ்யாவின் அபிநயம் நேர்த்தி.

மூன்றாண்டுகளுக்கு முன் அரங்கேற்றம் கண்டவர். வந்தே ஜெகன் மாதரம், ஓம் நமச்சிவாய, மகாகவி… உள்பட பல்வேறு நாட்டிய நாடகங்களில் மேடை ஏறி இருப்பவர்.

எந்த ஒரு வெற்றிக்கும் வேர்வை- வேர் வைக்கும். இது வாலிபக் கவிஞன் வாலியின் வார்த்தைகள். காலில் சலங்கை கட்டி மேடையில் சிந்தி இருக்கும் வேர்வை- – காவ்யாவின் வெற்றிக்கு வேர் வைத்திருக்கிறது.


வீ. ராம்ஜீ


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *