சிறுகதை

கற்பனையின் கதாநாயகன் – க.கமலக்கண்ணன்

“வேணாம் மருது நான் வேணும்ன்னு செய்யல” என்று சொன்னபடி பின்னால் நகர்ந்தான்.

“இல்லை நீ வேண்டாமுன்னுதான் செய்த” என்று சொல்லி, தான் போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, இடுப்பில் இருந்த முக்கால் அடி கத்தியை உருவி, அவன் மேல் முழுதாய் இறக்கினான் மருது.

***

அன்று காலை வழக்கம் போல விடிந்தது. கிழக்கு கடற்கரை சாலை அருகே ஒரு ரிசார்ட். அனைவரும் சுற்றி நிற்க, சூரியன் எட்டிப் பார்க்க, “ஸ்டார்ட் கேமரா. ஆக்சன்” என்ற குரல் ஒலிக்க, லக்கி ஸ்டார் தேவன் வசனத்தை பேசினான். வீராவேசமாக பேசி முடித்ததும் “கட்” என்ற குரல் ஒலிக்க, அனைவரும் கைத்தட்ட, பெருமிதத்துடன் ஒப்பனைக்கு அறைக்கு சென்றான்.

“பாண்டி”

“ஐயா”

“அடுத்தக் காட்சி என்னவென்று இயக்குனரிடம் கேட்டுட்டு, ஒப்பனை போடு.”

“சரிங்கையா. ஐயா என்னோட பையன் கதை சொல்ல நேரம் கேட்டிருந்தேனே.”

“அடுத்த வாரம் வரச் சொல்லுங்க. யாருகிட்ட உதவியாராக இருக்கார்?”

“இல்ல ஐயா. திரைப்பட கல்லூரியில படிச்சிருக்கான். நிறைய குறும்படம் எடுத்திருக்கான். நிறைய விருதும் வாங்கி இருக்கான். உங்க படம்தான் முதல்ல பண்ணனும்ன்னு ஆசைப்படுறான்.”

“சரி வரச் சொல்லுங்க. நேரம் ஆச்சி” என்று தேவன் சொன்னதும் பாண்டி விரைந்தான் இயக்குனரை பார்க்க…

***

“எப்போ படம் இயக்க போறீங்க? அதற்கு பின்தான் சுந்தரம்-ஹேமா திருமணம் தெரியுமா பேபி?”

“அப்பா லக்கி ஸ்டார் தேவன்கிட்ட நேரம் கேட்டிருக்கார். அடுத்த வாரம் வரச்சொல்லி இருக்கார். இந்த கதை நிச்சயம் பிடிக்கும். சம்மதிச்சிடுவார். படம் இயக்க வேண்டியதுதான். அப்புறம், நம்ம திருமணம்தான். அந்தக் கதையை சொல்லவா பேபி?”

“அய்யோ பேபி பல தடவை சொல்லி மனப்பாடமே ஆயிடுச்சி. காதலிக்க வந்தியா? கதை சொல்ல வந்தியா?”

“சரி சொல்லு பேபி”

“நான் பேபின்னு கூப்பிடுறத என் தோழிகள் கிண்டல் பண்ணுறாங்க. பேய் பிசாசுன்னு கூப்பிடுற மாதிரி இருக்காம்..”

“பேபின்னா பேய் பிசாசுன்னு அர்த்தம் இல்ல. பேரன்புமிக்க பிரியமானவனேன்னு அர்த்தம்ன்னு சொல்லு பேபி.”

“அசத்திட்ட பேபி. நீ பெரிய வசனகர்த்தான்னு நிருபிக்கிற பேபி.”

***

“கட்” பண்ணா… ஹீரோ குதிரையில் வர, கேமரா ஹீரோவை சுத்தி வருது. அவருக்கு முன்னாடி ஆயிரக்கணக்கான வீரர்கள் ஆயுதத்தோடு நிக்கிறாங்க. ஹீரோ வில்லெடுத்து அம்புகளை விட, பலநூறு வீரர்களை தாக்குது என்று ஆரம்பித்து ஒரு மணிநேரம் கதை சொன்னான் சுந்தரம்.

“கதை நல்லா இருக்கு சுந்தரம். இப்போ மூணு படம் ஒப்பந்தம் கையெழுத்து போட்டு இருக்கேன். நாலாவது படம் நாம பண்றோம்.” என்றான் தேவன்.

***

சில மாதங்கள் கழித்து மீண்டும் சென்று பார்க்க, தேவன் காத்திருக்கச் சொன்னான். அதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சென்று நிற்க, அதே பதிலே வழக்கமாயிற்று. மேலும் சில மாதங்கள் கழித்து, வீட்டுக்கு வெளியே வந்த சுந்தரம் அதிர்ந்து போனான்.

தேவனுக்கு சொன்ன கதையின், ஹீரோ அறிமுக காட்சியை ஆயிரக்கணக்கான வீரர்களுடன், தேவன் அரசர் போல குதிரையில் இருக்கும் காட்சியோடு, புதிய படத்தின் அறிவிப்பு சுவரொட்டியை அந்த பகுதி சுவர் முழுவதும் ஒட்டியிருந்தது. படத்தின் தலைப்பிற்குக் கீழே ஒரு பெரிய இயக்குனர் பெயர் இருந்தது.

காலடி நழுவியது போன்று உணர்ந்தான் சுந்தரம். அப்போது தளிர் கரங்கள் தாங்கி பிடித்தது. திரும்பிப் பார்த்தான், அவனைத் தாங்கிப் பிடித்திருந்தாள் ஹேமா.

***

“அப்பா என்னுடைய கதையை எடுத்து புது படம் எடுக்கிறார்கள்” என்று கதறினான் சுந்தரம்.

“நான் வீட்டிலிருந்து வெளியே வந்ததும். என் கண்ணில் பட்டுச்சு. இந்த சுவரொட்டியை பார்த்ததும் அதிர்ந்து போனேன். உடனே இங்கே வேகமாக ஓடி வந்தேன் மாமா.” என்று கண்ணீரும் அழுகையாய் சேர்ந்து வார்த்தைகள் தட்டுதடுமாறி வந்தது ஹேமாவிற்கு.

பாண்டிக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த படத்தின் விபரம் பற்றி ஏதும் தெரியவில்லை. கடந்த வாரம் மூன்றாவது படம் முடிந்து திருஷ்டி பூசணிக்காய் உடைத்து விட்டார்கள்.

“சரி.. பார்க்கலாம் இரு. நான் போய் தேவன் ஐயாவை பார்த்துவிட்டு வருகிறேன்.” என்று ஹேமாவை சுதந்திரத்தையும் சமாதானப்படுத்தி விட்டு, தேவன் வீட்டுக்கு கிளம்பினார் பாண்டி.

***

தேவன் வீட்டிற்கு சென்றதும் கேட்டுக்கு வெளியே பாதுகாவலர்களால் நிறுத்தப்பட்டார். வழக்கமான பாதுகாவலர் இல்லை புதிதாய் இருந்தார். அதனால் பாண்டி யார் என்பது அவருக்கு தெரியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் அங்கும் இங்கும் நிற்க முடியாமல் நடந்தார். கால்கள் அலை பாய்ந்தது. மனசு நீண்ட நேரம் போராடியது.

தேவனைப் பார்க்க அனுமதிக்கவில்லை. மேனேஜரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. மதியம் வரை காத்திருந்து விட்டு சரி வீட்டுக்கு செல்லலாம், என்று வீட்டுக்கு திரும்பினார் பாண்டி.

சுந்தரமும் ஹேமாவும் காலையிலிருந்து சாப்பிடாமல் ஒருவித பதட்டத்துடன் வீட்டில் அமர்ந்து இருந்தார்கள். பாண்டி உள்ளே சென்றதும் பெரும் பதட்டத்துடன் எழுந்து என்ன ஆயிற்று ஒன்றாக கேட்டார்கள். அதற்கு சுந்தரம் தேவன் பார்க்கவே அனுமதிக்கவில்லை என்று சொன்னதும் அப்படியே சோபாவில் உட்கார்ந்த சுந்தரம் இரு கைகளையும் முகத்தை மூடி கதற ஆரம்பித்தான், அதை பார்த்துக்கொண்டிருந்த ஹேமாவும் கண்கலங்க ஆரம்பித்தாள்.

ஆனாலும் அவனை தேற்ற ஆரம்பித்தார். நாட்கள் சென்றது ஒரு மாதம் ஆனது. ஒரு சாமானிய மனிதன் ஒரு மிகப்பெரிய கதாநாயகனின் முன்னால் நிற்க முடியாமல், எடுபடாமல் போனது. சுந்தரம் வீட்டுக்குள்ளேயே முடங்கி போனான். ஹேமா அவனுக்குள் முடங்கிப் போனாள்.

வீடு அமைதியாக இருந்தது. அதன் பிறகு வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே யாரிடமும் பேசாமல் காலத்தை கழிக்க ஆரம்பித்தான். தினம் தினம் இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாண்டி கண்கள் கலங்கினான். அதற்கு மட்டும் சரியான வாய்ப்பு கிடைத்திருந்தால், இப்பொழுது மாபெரும் இயக்குனர் ஆகி இருப்பான். அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒப்பனை செய்து விட்டு, இந்தத் திரைப்பட வாழ்வில் இருந்து விலகிக் கொள்ளலாம், என்ற மிகப்பெரிய கனவு திட்டத்தை வைத்திருந்த பாண்டிக்கு மிகப்பெரிய ஒரு ஏமாற்றமாகவே இருந்தது. அதைத் தாண்டி சுந்தரம் யாரிடமும் பேசாததால் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது.

***

சில மாதங்கள் கழித்து, ஹேமா அவனை கொஞ்சம் தேற்றியிருந்தாள். அடுத்தக் கதை இன்னும் நன்றாக இன்னும் சுவரஸ்யமாக உருவாக்க முனைந்தான். ஹேமா அதற்கு தகவல்கள் சேரித்துக் கொடுத்து உதவி செய்தாள்.

வேறு சில நண்பர்கள் மூலம் இன்னொரு கதாநாயகன் அருணிடம் கதை சொல்வதற்கு நேரம் வாங்கினான். பாண்டி வாழ்த்தி அனுப்பினார். ஹேமாவும் கோயிலுக்கு சென்று வேண்டிக் கொண்டு விபூதி பூசி அனுப்பினாள்.

***

அருணுக்கு கதை சொல்ல, அந்த கதை அருணுக்கு பிடித்துவிட்டது. சுந்தரம் எடுத்திருந்த குறும்படங்களை போட்டுக் காட்ட, அருணுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. படத்தின் தயாரிப்பாளராக அருணின் மேனேஜரை பொறுப்பு ஏற்றுக் கொள்ள சொன்ன அருண், பத்து லட்சம் ரூபாய்க்கு காசோலை எழுதி கையெழுத்திட்டு, முன்பணம் என்று கொடுக்க கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டான் சுந்தரம்.

வீட்டுக்கு வந்து, பாண்டியின் கால்களில் விழுந்து, காசோலையை கொடுத்து விபரம் சொல்ல, இன்ப அதிர்ச்சியில் கண்கள் கலங்கியது பாண்டிக்கு. சுந்தரம் வந்ததை பார்த்துவிட்ட ஹேமா ஓடி வந்தாள். அவளிடமும் விசயத்தை சொல்ல, மிகவும் மகிழ்ந்து போனாள்.

“எனக்கு தெரியும் பேபி. இந்த படம் வெற்றிகரமா அமையும்ன்னு.” என்று சொல்லி மகிழ்ந்தாள்.

***

அடுத்த சில வாரங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து, படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள். அன்று மன்னர்களுக்குள் போர் புரியும் காட்சி. நடிகர்கள் அனைவரும் வந்து நிற்க, நிஜமான போர்களம் போல காட்சி அளித்தது படப்பிடிப்புத் தளம்.

உணவு இடைவேளை விட்ட போது தேவனுக்கு கற்பனை செய்து வைத்திருந்த அரங்கம் போல காட்சியளிக்க, ஒரு நிமிடம் பழைய நினைவுக்குள் சென்றான் சுந்தரம். அந்தப் படம் இவன் இயக்கி இருந்தால், இந்நேரம் சில கோடிகள் இவனுக்கு கிடைத்து பேரும் புகழும் கிடைத்திருக்கும்.

“சுந்தரம்! சுந்தரம்!” என்ற குரல் வந்து சுந்தரத்தை மீட்டெடுத்தது. திரும்பிப் பார்த்தான். தயாரிப்பாளரும் அருணின் மேனேஜரும் ஆகிய ராஜு நின்றார்.

“என்ன சுந்தரம் கூப்பிடறது கூட தெரியாம சிந்தனை?.”

“பழைய நினைவுகள்”

“என்னவென்று சொல்லாமா?”

“உங்ககிட்ட சொல்லாமலா?” தேவனுடன் நடந்த அத்தனையும் சொன்னான். அதிர்ந்து போனார் ராஜு.

“இதை என்கிட்ட முன்னமே சொல்லி இருக்கலாமே சுந்தரம்”

“முடிஞ்சு போச்சி. வாங்க சார் சாப்பிட போகலாம்”

***

படம் வெளிவந்து சக்கை போடு போட்டது. முதல் வாரத்திலேயே போட்ட பணத்தையும் தாண்டி வசூல் ஆனது. 20 மடங்கு வசூலானது. அருண் பேசிய சம்பள பணத்தை விட நான்கு மடங்கு பணம் கொடுத்தான். பெரிய வீட்டை பரிசளித்தான் அருண். ராஜு கார் பரிசளித்தார். அடுத்த படமும் சுந்தரத்தை வைத்து பண்ணப் போவதாக அறிவித்தான்.

“ஏன் சார் இவ்வளவு சம்பளம்?”

“நீங்க தேவனால ஏமாற்றப்பட்டதை மேனேஜர். சொன்னர். அதனாலதான்.”

“ஏன் சார்?”

“எனக்கு கிடைக்க வேண்டிய முதல் படத்தை அவன் தட்டி பறித்துக் கொண்டான். அடுத்து வாய்ப்பு கிடைத்து நடிக்க மூன்று வருடம் ஆச்சி. அதற்குள் அம்மா இறந்துட்டாங்க. வலி ரொம்ப கொடுமை சுந்தரம். அதனாலதான் இது . உன் திறமைக்கு இது கம்மிதான் சுந்தரம்.”

அருண் தலைமையில் அடுத்த மாதம் தனக்கு திருமணம் என்று அறிவித்தான் சுந்தரம். அடுத்த மாதம் சுந்தரம் ஹேமா திருமணத்தை கோலகலமாக நடத்தி வைத்தான் அருண்.

***

அடுத்த மாதம் அருண் சுந்தரத்தின் புதிய படத்தின் அறிவிப்பும் தேவனின் புதிய படத்தின் அறிவிப்பும் வர, சில வாரங்கள் கழித்து, தேவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். சென்னையே பரபரப்பாக இருந்தது.

எதற்காக ஏன் என்று தெரியவில்லை. காவல்துறையாலும் கண்டுபிடிக்க முடியாமல் திணறியது. வழக்கு கடைசியில் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சிபிஐ-யும் கண்டுபிடிக்க முடியாமல் திணறியது.

***

பாண்டிக்கு இந்த செய்தியை ஹேமா சொன்னதும் அப்படியா என்று கேட்டுக் கொண்டார். அவர் காலை எழுந்து சாப்பிட்டுவிட்டு, வெளியே சென்று வந்து மதியம் சாப்பாடு மாலை சிற்றுண்டி பூங்காவுக்கு செல்வது என்று வழக்கம் போல சென்று கொண்டிருந்தது. வழக்கம் போல பூங்காவிற்கு சென்றார்.

ஒரு பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் பாண்டி. அப்போது சுந்தரம் வயதுடைய ஒருவர் அமர்ந்தார். அருகில் யாரும் இல்லை. சிறிது நேரம் கழித்து,

“ஐயா” என்று அழைத்த அவர். “நீங்க ஒப்பனையாளர் பாண்டிதானே.”என்றார்.

“ஆமாம் நீங்க?” என்று கேட்டார் பாண்டி. மெதுவாக குரலை தாழ்த்தி,

“தேவனை ஏன் சார் கொன்னீங்க?” என்று கேட்டதும் பதட்டமானார் பாண்டி.

“அது… அது…” என்று உளரினார் பாண்டி.

“பயப்படாதீங்க ஐயா. நான் சிபிஐ தான். ஆனால் உங்களை காட்டிக் கொடுக்கவோ, கைது செய்யவோ வரவில்லை. காரணம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் இங்கே வந்தேன்.”என்றார் அவர்.

“சொல்லுறேன்.” என்று சொல்ல ஆரம்பித்தார்.

‘‘கூறான கத்தி வாங்கி கொண்டு அவர் செல்லும் பண்ணை வீட்டுக்கு சென்றேன். பின் பக்கம் வழியில் தேவன் வரும் வரை காத்திருந்தேன். வந்தும் குத்திவிட்டு வந்துட்டேன்.

“வருகின்ற வழியில் மிளகாய் பொடி தூவிட்டு வந்துட்டேன் கத்தியை வடஇந்தியா செல்லும் ஒரு லாரி மேல தூக்கிவீசி விட்டு வந்துட்டேன்.” என்றார் பாண்டி.

“அது ஏன் மருதுன்னு தேவன் சொன்னான்?” என்று கேட்டார் அவர்.

“ஏன்னா நான் முகத்தை மாற்றும் ஓப்பனை போட்டிருந்தேன் மருது போல.”

“யார் அந்த மருது?”

“அவர் என்னோட வேலை பார்க்கும் லைட்மேன்.”

“சரி. காரணம் சொல்வே இல்லையே.”

“என் மகன் கதையை திருடி வேறு ஒரு பெரிய இயக்குனரிடம் படம் பண்ணிட்டான் தேவன்.”

“சரி உண்மையான காரணம் இது அல்ல.”

“உண்மையை சொல்லுறேன். போன வாரம் ஒரு புதுப்படம் அறிவிப்பு வந்துச்சில்ல. அந்த படத்தோட கதை மருதுவோட மகன் எழுதினது. அதையும் திருடி படம் எடுத்துகிட்டு இருக்கான் தேவன். என் மகன் திறமைசாலி ஜெயித்துவிடுவான்னு தெரியும். ஆனா மருது மகன் பாவம் அதிர்ச்சியில சுயநினைவு இழந்துட்டான். அதான் அடுத்தவனின் கற்பனையை திருடும் அந்த துரோகியை நானே கொலை பண்ணிட்டேன். என்னை கைது பண்ணுங்க சார்”

“இல்ல. அந்த தேவனுக்கு தண்டனை சரிதான். நான் யார் தெரியுமா?”

“தெரியாது. சிபிஐ. அதிகாரிதானே.”

“ஆமாம். சிபிஐ அதிகாரிதான். ஆனா மருதுவோட மூத்தமகன். சுயநினைவு இழந்தது என்னோட தம்பி.” என்றான் மருதுவின் மூத்தமகன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *