சிறுகதை

கறார் வசூல்

சிறுகதை  ராஜா செல்லமுத்து

மாதத்தின் முதல் நாள் வந்தால் போதும். மூச்சு முட்டிப் போகும் முருகேசுக்கு.
இப்போது மாதம் பிறந்து ஏழு தேதியைத் தொட்டு நின்றது.
யப்பப்பா. இப்படின்னு கண்ண மூடி கண்ண தெறக்கறதுக்குள்ள ஒரு மாசம் முடிஞ்சு. பட்டுன்னு ஒண்ணா தேதியில வந்து நிக்குது .மாசாமாசம் வாடகை குடுக்கலன்னா அம்புட்டுதான் அந்த கெழவி ஆஞ்சுபுடுவா ஆஞ்சு. இந்த ரெண்டு மாசமா நம்ம பட்ட பாடு ரொம்ப பெரிய பாடு. இப்ப திரும்பவும் ஏழாம் தேதியில் வந்து நிக்குது.
என்ன செய்யக் காத்திருக்காளோ இந்த கமலா கெழவி “முருகேசு முணங்கிக் கொண்டே முன்னேறினான். வீடு வர வர அவனுக்கு “திக் திக் ” என அடித்துக் கொண்டது . அவன் குடியிருக்கும் கண்ணகி தெருவைப் பார்த்ததும் கதிகலங்கி நின்றான்.
ஆகா, தெரு வந்திருச்சே, இப்ப மணி என்ன? என்று கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்க்காமலே தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துப் பார்த்தான் முருகேசு . அதில் இரவு எட்டு மணி பத்து நிமிடம் இருபத்தி நாலு செகண்டு என்று காட்டியது.
“ம்ம்.. இன்னும் இந்தக் கெழவி, வாசல விட்டுப் போயிருக்க மாட்டோளே. சும்மாவே தூங்க மாட்டா. இப்ப வாடகை வேற குடுக்கணும். ரவைக்கெல்லாம் வாட்ச்மேன் மாதிரி காவல் காப்பாளே. “ம்ம்” இப்ப என்ன பண்ணலாம். அடர்த்தியான யோசனையில் ஆழ்ந்து கண்ணகி தெருவின் முன்னால் நின்று கொண்டிருந்தான்.
அவன் எண்ண அலைகள் எங்கெங்கோ சென்று திரும்பியது. தெருவைக் கடந்து சிறிது தூரத்திலிருக்கும் கமலா வீடு வெளிச்சமாகவே இருந்தது.
“இம்ம்” என்று கமலாகிழவி செருமும் சத்தம் முருகேசின் மூளை வரை அறைந்தது.
“இல்ல” இல்ல, இந்தக் கெழவி இன்னும் தூங்கல போல. போனா கூட வீட்டுக்குள்ள போயிரலாம்.
வாட்ச்மேன் மாதிரி வாசல்லயே உட்காந்து கெடப்பாளே . இவள மீறி உள்ள போக முடியாதே என்ற முருகேசு குட்டி போட்ட பூனை மாதிரி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.
வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த கமலாக் கிழவி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
“நாம என்ன கேனச் சிறுக்கின்னு நெனச்சானா? வாடக குடுக்காம டிமிக்கி குடுத்திட்டு இருக்கான். இவன இப்படியே விடக்கூடாது. இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பாத்தா தான். கேட்டா தான் ஒரு முடிவு பெறக்கும் என்ற முடிவோடு வாசலிலேயே உலாத்திக் கொண்டிருந்தாள். கமலாக்கிழவி முருகேசின் வீட்டையும் வாசலையும் பார்த்தவாறே இருந்தவளை தூர இருந்து பார்த்த படியே இருந்தான் முருகேஷ்.
இன்னைக்கெல்லாம் போகமாட்டா போல கொஞ்சம் தள்ளிப் போனாக் கூட பட்டுன்னு வீட்டுக்குள்ள போயி கதவ அடச்சுக்கிறளாம் .ஆனா இவ போக மாட்டா போலயே என்ற முருகேஷ் கொஞ்சம் நெருங்கி நெருங்கி வீடு வந்தான்.
“ம்ம்” என்ன பண்ணலாம்?
அடர்த்தியான யோசனையில் மூழ்கியவனை யாரோ தொடுவது போலவே இருந்தது.
யாரென சட்டென திரும்பிப் பார்த்தான்.
என்ன முருகேசா வீட்டுக்கு போகலியா?
“ம்” போகணும் ”
“இல்ல ரோட்டுலயே சுத்திட்டு இருக்கியே. அதான் கேட்டேன் என்றவன் முருகேசைக் கடந்து போனான்.
இப்படியே வெளிய நின்னோம் .அவ்வளவு தான்.
வாரவன் போறவன் எல்லாம் கேட்டுட்டே இருப்பானுக என்ற முருகேசு யோசனை வந்தவனாய் சட்டென தன் செல்போனை எடுத்து கமலாக் கிழவிக்கு போன் செய்தான்.
“ஹலோ யாருப்பா பேசுறது?
“பாட்டி நான் முருகேசோட அண்ணன் பேசுறேன். தம்பி ரெண்டு மாசமா வாடகை குடுபக்கலையாமே என்று குரல் மாற்றியப் போசினான் முருகேஷ்
“ஆமாப்பா இன்னைக்கு அவன் வாடகை தரலன்னா அவ்வளவு தான்.. இதோட விட்ட விட்டு வெரட்டி விட்டுருவேகன் என்று மூர்க்கத்தனமாகக் கத்தினாள் கமலாக்கிழவி
பாட்டி உங்க போன் நம்பர குடுங்க
“ஏன்?
ஒங்க போன் நம்பருக்கு பணம் போட்டு விடுறேன் என்றவனை
“ஏம்பா நீ தான போன மாசம் நம்பம் கேட்டு வாங்குனவன்.
முன்னால வாங்குனதுக்கே பணம் போடல. இன்னும் நம்பர் கேட்டுட்டு இருக்க. போப்பா நம்பரெல்லாம் தரமுடியாது. வையி போன என்று கமலா கடுமையாகத் திட்டினாள்.
இல்ல பாட்டி போன மாசம் கொஞ்சம் வேலையா போச்சு. அதான் பணம் போட முடியல . இந்தமாசம் கண்டிப்பா பணம் போட்டு விடுறேன். ஒங்க போன் நம்பர் குடுங்க என்று கேட்க.
நில்லு வாரேன் .எழுதுவதை எங்க வச்ச?
இல்ல பாட்டி, எழுதுவதை எங்கயோ வச்சிட்டேன் . இப்ப குடுங்க எழுதி வச்சுக்கிறேன்.
கண்டிப்பா இந்த மாசம் போட்டு விட்டுர்றேன் என்று பேசியதை நம்பி கமலா வீட்டிற்குள் நுழைந்தநேரம் பட்டென வீட்டிற்குள் நுழைந்த முருகேசு படாரென தாழிட்டுக் கொண்டான்.
வங்கிக் கணக்கை எடுத்த கமலா
நம்பர் சொல்லட்டுமா?
சரி சரி சொல்லுங்க எழுதிக்கிறேன்” என்று அதுவரையில் குரலை மாற்றியே பேசிக் கொண்டிருந்தான். முருகேசு .
எட்டு நாலு ரெண்டு மூணு என்று கமலா கிழவி சொல்லச் சொல்ல
முருகேசு எழுதிக் கொண்டே இருந்தான்.
சரிபாட்டி நான் தம்பி கிட்ட இருந்தான்.
சரிபாட்டி நான் தம்பி கிட்ட சொல்றேன் என்றுபோனைக் கட் செய்தான் முருகேசு
“யப்பாடா இன்னைக்கு தப்பிச்சிட்டோம். நாளைக்கு என்ன பண்ணப் போறோம்னு தெரியலையே என்ற முருகேசு மின்சாரவிளக்குகள் அத்தனையும் அணைத்து விட்டு வீட்டினுள்ளே இருந்தான்.
இன்னைக்கு வரட்டும் நாளைக்கோட இவன வீட்ட விட்டுஅனுப்பிர வேண்டியது தான் என்ற கமலா கிழவி வீட்டின் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தாள்.
முருகேசு வீட்டினுள்ளே தூங்க ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *