குவிந்து கிடக்கும் எச்சில் பாத்திரங்களையும் கடித்துத் துப்பிய எலும்புத் துண்டுகளையும் சேகரித்து அள்ளியபோது அற்புதத்திற்கு அழுகையே வந்தது.
இது யார் துப்பிய எச்சி யார் வீட்டுக்கு வேல செய்கிறது? இதுவெல்லாம் நமக்குத் தேவைதானா? கேவலம் சம்பளத்திற்காக சுயமரியாதை விக்கிறதா? எப்படி எல்லாம் வாழ்ந்த நாம இப்படி ஆகிவிட்டோமே? என்று மனதிற்குள் புழுங்க எச்சில் பாத்திரங்களையும் எலும்புத் துண்டுகளையும் சேகரித்து அள்ளியபோது அற்புதத்தின் கண்கள் கரகரவென்று கண்ணீர் பெருகியது.
எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். இன்னும் என்னென்ன கடவுள் நமக்கு தர காத்திருக்கிறாரோ? அழும் போதே செத்ததுக்கு அப்புறம் தான் நரகம்னு சொல்லுவாங்க. ஆனா கடவுள் நமக்கு அதை வாழும்போதே காமிச்சிட்டானே என்று உயிர் உருக அழுது கொண்டே குப்பைத் தொட்டியில் எலும்புகளையும் பாத்திரம் தேய்க்கும் இடத்தில் பாத்திரங்களையும் அள்ளிப் போட்டு அத்தனையும் துலக்க ஆரம்பித்தாள், அற்புதம்.
அழுகை ஒரு பக்கம். ஆவேசம் ஒரு பக்கம். கோபம் ஒரு பக்கம என்று மொத்தமாக அவளை அழுகை சூழ்ந்து இருந்தாலும் இது அத்தனைக்கும் காரணம் அவள் தான் என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
உடன் வேலை செய்யும் கண்மணி அற்புதம் அழுவதைப் பார்த்து விட்டாள். ஆனால் அவள் எதற்காக அழுகிறாள் என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும். மறுபடியும் கேட்டு மேலும் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டாள். அழுது கொண்டே அந்த எச்சில் பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருந்தாள் அற்புதம்.
வீட்டில் காலுக்கு ஒரு சேர், உட்கார்வதற்கு ஒரு சேர்னு போட்டு எவ்வளவு ரங்க ராட்டினமா சாப்பிட்டுகிட்டு இருந்தோம். நம்ம சாப்பிட்ட தட்டக் கூட கழுவுறதுக்கு நாம யோசிப்போம். மருமகளை எவ்வளவு சித்திரவதைப்படுத்தி இருப்போம். இருந்த இடத்திலேயே காபி. உட்கார்ந்த இடத்திலேயே சாப்பாடு. எவ்வளவு நாட்கள் எள்ளல் பண்ணி இருப்போம் அதுக்கு தான் கடவுள் இப்போ நமக்கு தண்டனை கொடுத்திருக்கான் போல என்று அவள் நினைத்து நினைத்து புழுங்கிப் புழுங்கி அழுகலானாள். ஒரு கட்டத்திற்கு மேல் அற்புதத்தின் அழுகையை காணாத கண்மணி இப்போது மெல்ல வாய் திறந்தாள்.
அற்புதம் ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க? நீ எதுக்கு அழுகுற அப்படின்னு எனக்கு சொல்லாமலே தெரியும். அத நான் கேக்க விரும்பல. இங்க பார் நம்முடைய வாழ்வு தாழ்வு எல்லாம் நம்ம கிட்ட தான் இருக்கு. எல்லா மனுஷனுக்குள்ளயும் நான் பெரியவன் அப்படிங்கற கொம்பு முளைக்கும். நான் அப்பிடிங்கிற அந்த கொம்பு அப்படியே நம்ம வளர விட்டோம்னா அது நம்மள அழிச்சிடும் அற்புதம்.
யாருகிட்ட அன்பா போகணும். யார்கிட்ட கோபப்படணும். யார்கிட்ட பாசமா இருக்கணும். அப்படின்ற ஒரு வரைமுறை இருக்கு. நீ எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருக்க. இது தப்பு. உன் கூட பிறந்தவங்க கூடவும் சரியான இணக்கமல்ல. பெத்த புள்ளையோட சரியான இடத்தில் இல்ல. சொந்த பந்தம் கூடயும் சரியான சேர்க்கை இல்ல.
இதுக்கெல்லாம் காரணம் உன்னுடைய முன் கோபம் தான். அகம்பாவம் இதெல்லாம் இருக்கக் கூடாது. இங்க சேர்ந்து வாழ்வதுதான் மனுஷ வாழ்க்கை. எல்லாருக்கும் எல்லாரிடமும் பெரியவன் அப்படிங்கற ஒரு மமத இருக்கத்தான் செய்யும். அந்த மமதய தூக்கி தலையில வச்சோம்னா நம்மள இங்க யாரும் மதிக்க மாட்டாங்க. அதனால எதுக்காக அழுகிறா? அப்படி என்கிற விவரம் எனக்கு நல்லா தெரியும். நீ பிறந்த பிறப்பு. இருந்த இடம் எல்லாமே எனக்கு தெரியும். இப்ப செஞ்சுகிட்டு இருக்கிற வேலை எப்படிப்பட்டது அப்படிங்கிறது எனக்குத் தெரியும். அதுக்கு காரணம் நீ மட்டும் தான் அற்புதம்.
உன்னை நீ திருத்திக்கிட்டா மட்டும் தான் இதிலிருந்து விடுதலை பெற முடியும். இல்ல இதைவிட இன்னும் நீ எவ்வளவு மோசமான நிலைக்குப் போனாலும் அதற்கு காரணம் வேற யாருமே இல்ல. அது நீயா தான் இருப்ப என்று சொல்லிய கண்மணி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
அவள் சொன்னதை உன்னிப்பாக கவனித்த அற்புதத்திற்கு இதுதான் எனக்கும் தெரியுமே? இத எப்படி விட்டு ஒழிக்கிறதுன்னு எனக்கு தெரியல. நான் வேணுமென்னு கோபப்படல என்னமோ தெரியல நான் பேசறது எல்லாம் கடைசில தப்பா தான் போய் முடியுது.
கடவுளே இந்த புத்தியை என்கிட்ட இருந்து எடுத்துரு. நான் சாப்பிட்ட தட்ட கூட வீட்ல நான் கழுவுனதில்ல இப்ப பாரு கேவலம் சம்பளத்துக்கு யார் யார் சாப்பிட்டத கழுவ வேண்டிய நிலைமையில இருக்கேன். இதுக்கு ஒரு விடுதலை கொடு கடவுளே என்று இப்போது அழுதாள், அற்புதம்.
அந்த அழுகையில் ஒரு அர்த்தம் இருந்தது.