கட்டபொம்மன் – 5
ஆங்கிலேயர்களை பார்த்து, நீங்கள் என்ன நினைத்து என்னை வைத்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும், ஏன் காலம் கடத்துகிறீர்கள், நீங்கள் நினைத்ததை உடனே நிறைவேற்றுங்கள் என்று கட்டபொம்மன் கர்ஜித்து இருக்கிறார்.
கட்டபொம்மனை கைது செய்வதற்கு முன்பாக, அனைத்து பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலேயேர்கள் தபால் அனுப்பி, தங்களது கோட்டையை அழித்துவிட வேண்டும், ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர்.
அவர்களும் அதேபோல் செய்து விட்டு, கயத்தாறு வருகின்றனர். பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை இடிக்கப்பட்டு உப்பு தூவப்பட்டு, ஆமணக்கு விதை போடப்பட்டது.
கட்டபொம்மன் குடும்பம்
கோட்டையை இடிக்கும்போது, கோட்டைக்குள் கட்டபொம்மனின் அம்மா ஆறுமுகத்தம்மாள், மனைவி ஜக்கம்மாள், ஊமைத்துரை மனைவி சவுந்தரவடிவு, அவரது மச்சினன் அவரது குழந்தைகள் என 14 பேர் இருக்கிறார்கள். கட்டபொம்மனின் மனைவி ஜக்கம்மாள் அப்போது கர்ப்பிணி.
தூத்துக்குடியில் டேவிட்சன் என்று ஓர் அதிகாரி இருந்தார். இவர் கட்டபொம்மனிடம் மிகவும் நட்புடன் பழகி வந்தார். இருந்தாலும் அவர் தனது அரசுக்கு நம்பகமாகவே நடந்து கொண்டார்.
இவர் தான், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் இருந்த கட்டபொம்மனின் தாய் ஆறுமுகத்தம்மாள் உட்பட 14 பேரையும் அழைத்து செல்கிறார். இவர் கட்டபொம்மனுக்கு நண்பர் தானே என்று எண்ணிய கட்டபொம்மனின் குடும்பத்தாரும், டேவிட்சனுடன் புறப்பட்டு சென்றுள்ளனர்.
டேவிட்சன் தூத்துக்குடியில் வைத்து 14 பேரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பி வைத்துவிட்டார். கட்டபொம்மன் என்ன ஆனார் என்று குடும்பத்துக்கு தெரியாது. குடும்பம் என்ன ஆனது என்று கட்டபொம்மனுக்கு தெரியாது.
இதற்கிடையில், 72 பாளையக்காரர்கள் முன்னிலையிலும் கயத்தாறில் கட்டபொம்மனிடம் விசாரணை நடக்கிறது. காரணம் இதனை பார்த்து மற்ற பாளையக்காரர்களுக்கும் பய உணர்வு வர வேண்டும் என்றும், யாரும் நம்மை எதிர்த்து நிற்க கூடாது என்றும் ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள்.
தானாதி பிள்ளையின் தலையை…
ஒரு முறை கோலார்ப்பட்டியில் எதிரி படை சூழ்ந்து கொள்கிறது. கட்டபொம்மனின் முதன்மை அமைச்சர் தான் தானாதி பிள்ளை. அவருடைய உண்மையான பெயர் சிவசுப்ரமணியபிள்ளை. ஒட்டபிடாரத்தை சேர்ந்தவர்.
தானாதி பிள்ளையை பிடித்த ஆங்கிலேயர்கள், கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல் நடந்து கொள்வதற்கு காரணம், அவரை வழிநடத்தும் தானாதி பிள்ளைதான் என்று சொல்லி, அவரை கைது செய்து நாகலாபுரத்துக்கு அழைத்துச்சென்று அங்கு அவரை தூக்கிலிட்டு கொல்கிறார்கள்.
பின்னர் அவரது தலையை வெட்டி எடுத்து பாஞ்சாலங்குறிச்சி சுவற்றில் ஒரு ஈட்டியில் சொருகி வைத்து விட்டனர். இதனைப்பார்க்கும் மக்களுக்கு நம் மீது அச்ச உணர்வு வர வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தனர்.
இதே வழிமுறையைத்தான் கயத்தாறிலும் கடைபிடித்தார்கள் ஆங்கிலேயர்கள்.
![]()





