செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி: இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்


டெல்லி, ஜூலை 31-


நாட்டிலேயே கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக, இந்திய அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, வயது வாரியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பின்பு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து தொடர்ந்து ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. இறுதியாக கர்ப்பிணிகளும் , பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று ஜூலை 2 ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
தமிழ்நாடு முதலிடம்
இதனைத் தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அரசின் சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ நாட்டில் 2.27 லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 78,838 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து, ஆந்திராவில் 34, 228 கர்ப்பிணிகளுக்கும், ஒடிசாவில் 29,821 கர்ப்பிணிகளுக்கும் மத்திய பிரதேசத்தில் 21,842 கர்ப்பிணிகளுக்கும் கேரளாவில் 18,423 கர்ப்பிணிகளுக்கும், கர்நாடகாவில் 16,673 கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *