செய்திகள்

கர்னாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற அமைச்சர் தடுத்து நிறுத்தம்

மும்பை, ஜூலை 10

கர்னாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் டி.கே. சிவக்குமாரை சந்திக்க மறுத்து விட்டனர்.

கர்னாடகாவில் ஆளும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி தலைமை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

ராஜினாமா கடிதங்களை திரும்ப பெற வலியுறுத்தி அந்த ஓட்டல் முன்பு போராட்டமும் நடத்தினர். எம்எல்ஏக்களை இழுக்க பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி முழக்கமிட்டனர்.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து சமாதானம் செய்வதற்காக, கர்னாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று மும்பை விரைந்தார். மும்பை விமான நிலையத்தில் இருந்து நேராக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்றார். ஓட்டல் வாசலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எனது நண்பர்கள் ஓட்டலில் தங்கி உள்ளனர். எங்களுக்குள் சிறிய பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உடனடியாக நாங்கள் பிரிந்துவிட மாட்டோம். எங்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஒருவருக்கொருவர் நல்ல மரியாதை வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.

ஆனால், டி.கே.சிவக்குமார் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல் முன்பு, ஜேடிஎஸ் தலைவர் நாராயண கவுடாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டி.கே.சிவக்குமாரை திரும்பி போகும்படி கூறி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும், டிகே சிவக்குமாரை சந்திக்க விரும்பவில்லை. முதல்வர் மற்றும் சிவக்குமார் வருவதால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில், அமைச்சர் டி.கே.சிவக்குமாரை ஓட்டலுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. அவரை பிரதான வாயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் ஓட்டலைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *