பெங்களூரு, நவ. 6
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார்.
அதன்படி இது குறித்து தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான தீர்ப்பை வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றம், சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என்று குறிப்பிட்டது.
சித்தராமையா நேரில் ஆஜர்
பின்னர் முடா முறைகேடு தொடர்பாக முதலமைச்சர்ர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
தொடர்ந்து வரும் நவம்பர் 6-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கர்நாடக சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீஸ் சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், சித்தராமையா இன்று மைசூரு லோக்அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார்.