செய்திகள்

கர்நாடக மாநில ஓட்டலில் தங்க தோசை: விலை ரூ.1001

பெங்களூரு, நவ. 12–

கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள ஒரு உணவகத்தில் தங்க தோசை ரூ.1001 க்கு விற்பனை ஆவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாதா தோசை, மசால் தோசை, கல் தோசை, பொடி தோசை, நெய் தோசை ,கறிவேப்பிலை தோசை, கொத்தமல்லி தோசை, புதினா தோசை என்று தோசையில் ஏகப்பட்ட வகைகள் உண்டு . இப்படி பலவகையான தோசைகளை உணவகங்கள் தயார் செய்து விற்பனை செய்து வரும் நிலையில், கர்நாடக மாநில உணவகம் ஒன்று தங்க தோசை என்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.

தோசை விலை ரூ.1001

கர்நாடக மாநிலத்தில் துமகூரு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தான் புதிய முயற்சியாக இந்த தங்க தோசை விற்பனை செய்யப்படுகிறது. இது உணவு பிரியர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றிருக்கிறது. இந்த ஒரு தங்க தோசை ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மசால் தோசை தயார் செய்து அது சூடாக இருக்கும் போதே, அந்த தோசையின் மேல் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட மெல்லிய தாள் அதன் மீது வைக்கப்படுகிறது. இந்த தங்க தோசை அந்த உணவகத்தில் பரபரப்பாக விற்பனையாகிறது. தினமும் 20 தங்க மசால் தோசைகள் விற்பனையாகின்றன என்று அந்த உணவகம் தெரிவித்துள்ளது.

இந்த தோசையில் வைக்கப்படும் தங்க மூலாம் பூசப்பட்ட தாள்கள், குஜராத்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றன என்று தெரிவித்திருக்கிறது அந்த உணவக நிர்வாகம். இந்த தங்க தோசைக்கு “கோல்டன் பாயில் எடிபல் மசால் தோசை” என பெயரிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *