செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் 5 முறை நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள்: புவியியலாளர்கள் குழு ஆய்வு

பெங்களூர், நவ. 13–

கர்நாடகா மாநிலம் சிக்பல்லாப்பூர் மாவட்டத்தில் இரவில் நான்கு முறையும் நேற்று மாலையில் ஒரு முறை என, மொத்தமாக 5 முறை நிலநடுக்கத்தை கிராம மக்கள் உணர்ந்ததால் பீதியடைந்துள்ளனர்.

கர்நாடகாவில், பெங்களூரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ளது சிக்பல்லாப்பூர் மாவட்டம். இங்குள்ள, சிந்தாமணி, மிட்டஹள்ளி, அப்சனஹள்ளி,கொடகன்லு ஆகிய கிராமங்களில் நேற்று மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்டவை உருண்டோடி உள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு 8 மணி, 11 மணி, விடியற்காலை 4 மணி, 5 மணி என 4 முறை நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் தங்காமல் பொதுவெளியில், வீடுகளுக்கு முன்பாக காத்து கிடந்துள்ளனர்.

இதையடுத்து, சிக்பள்ளாப்பூர் கலெக்டர் ஆர்.லதா, போலீஸ் சூப்பிரண்டு ஜி.கே.மிதுன் குமார் ஆகியோர், புவியியலாளர் குழுவுடன் அங்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் நேரில் சென்று விவரம் கேட்டறிந்தனர்.

பூகம்பம் இல்லை

இதனைத்தொடர்ந்து கலெக்டர் லதா கூறுகையில், மிட்டஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பீதியடையத் தேவையில்லை, ஏனெனில் இது பூகம்பம் இல்லை. அவர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடரலாம் என்றும், கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தில் (கேஎஸ்என்டிஎம்சி) ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் பற்றி எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறி உள்ளார்.

இருப்பினும், புவியியலாளர்கள் குழு ஒன்று அந்த கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் ஒரு வார காலத்திற்கு அது என்ன ஒலி என்பதை கண்காணிப்பதற்காக முகாமிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிட்டஹள்ளியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் இதுகுறித்து கூறுகையில், மூன்று அல்லது நான்கு முறை பெரிய ஒலி மற்றும் அதிர்வு ஏற்பட்டதை கிராம மக்கள் உணர்ந்ததால், பீதிக்கு ஆளாகினர். ஆனால், கிராமத்திற்கு உயர் அதிகாரிகள் வந்திருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *