பெங்களூரு, ஜன. 30–
கர்நாடக மாநிலத்தில் மிக இளம் வயதில் பெண்கள் கர்ப்பமடைவது தொடர் கதையாகி வருகிறது என்றும் கடந்த 3 ஆண்டுகளில் 33 ஆயிரம் பேர் கர்ப்பமாகி உள்ளதாவும் அண்மை கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா மாநிலத்தில் மாவட்ட அளவில் கர்ப்பிணிகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் 2021-22 முதல் 2023-24 வரை டீன் ஏஜ் கர்ப்பங்கள் 33,621 எனப் பதிவாகியுள்ளன. இதில் பெங்களூரு அர்பன் மாவட்டத்தில் தான் அதிகப்படியான டீன் ஏஜ் கர்ப்பங்கள் அரங்கேறியுள்ளன. அதாவது, 4,324 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக விஜயா நகர் 2,468 பேரும், பெல்லாரி 2,283 பேரும், பெலகாவி 2,224 பேரும், மைசூரு 1,930 பேரும் என கர்ப்பம் அடைந்துள்ளனர்.
நிதியாண்டு வரிசையில் பார்த்தால் 2021-22 இல் 11,792 பேர், 2022-23 இல் 13,198 பேர், 2023-24 இல் 8,631 பேர் டீன் ஏஜ் கர்ப்பம் என்று கூறப்பட்டுள்ளது.
பெண்களை மேல்படிப்பு வரை படிக்க வைக்க போதிய உதவிகளை செய்ய வேண்டும். ஒருவேளை வலுக்கட்டாயமாக இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட்டால் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக டீன் ஏஜ் கர்ப்பங்களுக்கு காரணமான நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் காரணம்
டீன் ஏஜ் கர்ப்பங்களுக்கு பின்னால் வேறு சில காரணிகளும் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, சமூக பொருளாதார நிலை, மிக எளிதாக இண்டர்நெட் வசதியை பயன்படுத்தும் சூழல், சமூக வலைதளங்களின் ஈர்ப்பு, நிலையற்ற குடும்ப நிலை, செக்ஸ் கல்வி குறித்த போதிய அடிப்படை அறிவு இல்லாதது போன்றவை காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக பேசிய கர்நாடகா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நாகன்னா கவுடா, டீன் ஏஜ் பிரிவை சேர்ந்தவர்களுக்கு சமூக வலைதளங்கள் நிறைய விஷயங்கள் அப்பட்டமாக காட்டி விடுகின்றன. இது அவர்களை தவறாக வழிநடத்தி செல்கிறது. ஆன்லைனில் என்ன பார்க்கிறார்களோ, அதற்கு அடிமையாகும் சூழல் வருகிறது.
இது வழிமாறி செல்லும் முடிவுகளை எடுக்க வைக்கிறது. மிக இளம் வயதிலேயே ஆண் பெண்ணுடன் நெருங்கி பழகும் வழக்கங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இது கர்ப்பத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது. இதற்கு உரிய விழிப்புணர்வும், அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த முயற்சியும் அவசியம் என்று தெரிவித்தார்.