ஆர். முத்துக்குமார்
காவிரி நதிநீர் பிரச்சனை விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமல்லாமல் தற்போது மிகப்பெரிய அரசியலாகவும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
தண்ணீர் திறக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதமே கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்களைக் காக்க விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடிவீதம் 15 நாட்களுக்கு 6.25 டிஎம்சிதண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழு, கர்நாடக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. ஆனால் அதையும் தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் அறிவித்துள்ளனர்.
‘பொன்னி’ என்றும் அழைக்கப்படும் காவிரிநீரை வைத்து இரண்டாயிரம் ஆண்டுகளாக நெல்சாகுபடி செய்து வருவது தமிழக விவசாயிகள் தான். நதிநீர் உற்பத்தி ஆகும் இடத்தை விட பாரம்பரியமாக அதைப் பயன்படுத்துவோருக்கு தான் முதல் உரிமை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது என்பதால் அரசியல் மேடையில் அனல் பறக்கும் பேச்சுக்களுக்கு நல்ல கருப்பொருளாகவும் காவிரி நீர் இருக்கிறது.
பாய்மரக்கப்பலின் பாயை இறக்காமலே நேரடியாக ஆற்றின் உள்ளே வந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை நடத்திய காவிரிப்பூம்பட்டினம் என்ற புகார் நகரம்
( பூம்புகார் )இன்று காணாமல் போய்விட்டது. காவிரி நீள, அகல, ஆழத்துடன் பிரம்மாண்டமாய் கடலில் கலந்தது எல்லாம் ஒரு காலம். காவிரியில் வெள்ளம் ஏற்படுவதை பார்ப்பதும் அபூர்வம். சொல்லப்போனால் காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் வருவதே இன்று சிக்கலாய் போய்கொண்டிருக்கின்றது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் செப்.13 முதல் 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீரை விட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும்.
தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பான சர்ச்சையை தீர்க்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை (சிஎம்ஏ) மத்திய அரசு அமைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்திடம் வாதாடி தமிழகத்திற்கு தண்ணீர் பெறுவோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.
காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு ஆணையிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 21–ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மதித்து ஒரு போதும் தண்ணீர் விடுவது கிடையாது.
காவிரி நதிநீர் சட்டம் எழுத்து வடிவில் மட்டுமே இன்றுவரை உள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று அறிவித்து விட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, அந்த முடிவின் பின்னணியில் ஒட்டுமொத்த கர்நாடகமும் ஒன்றாக இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டுவதற்காக இரண்டாவது அனைத்துக் கட்சிக் கூட்டம் 3 வாரத்தில் கூட்டப்பட்டிருக்கிறது.
* தமிழகத்தில் நிலையான விவசாயம் இல்லை
* தமிழகம் தண்ணீரை வீண் செய்து கடலில் கலக்கவிடுகிறது
என்பன தான் கர்நாடகா தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுக்க சுட்டிக்காட்டும் காரணங்கள். அதை சரிசெய்தால் வரும் காலங்களில் இப்படி ஒவ்வொரு முறையும் உரிமைக் கேட்டு குரல் கொடுக்க அவசியம் இருக்காது.