சென்னை, மார்ச் 05–
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தொடர்புடைய இடங்களில் 2017 ஆம் ஆண்டு, வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில், கணக்கில் காட்டப்படாத தொகை ரூ.8 கோடி 59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை 2018 ஆம் ஆண்டில், தற்போதைய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மீது, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. அதன் அடிப்படையில், அவரை கைது செய்து 60 நாட்கள் வரையில் சிறையிலும் அடைத்திருந்தது.
அமலாக்கத்துறை வழக்கு ரத்து
இந்நிலையில் அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து, டி.கே.சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், கூட்டுச்சதி என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு, சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கனவே உள்ளது. அதனை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே, டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்தது.